சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பு சிவகுமாருக்கு குமாரசாமி பதிலடி
சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பு சிவகுமாருக்கு குமாரசாமி பதிலடி
ADDED : பிப் 20, 2024 11:34 PM

பெங்களூரு, : ''மிரட்டி, கண்ட இடங்களுக்கு வேலி போடுவது எங்கள் வாழ்க்கையில் கிடையாது. நான் யாரையும் மிரட்டவில்லை. மிரட்டவும் மாட்டேன்,'' என துணை முதல்வர் சிவகுமாருக்கு, முன்னாள் முதல்வர் குமாரசாமி, பதிலடி கொடுத்தார்.
ராஜ்யசபா தேர்தலுக்காக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி, மிரட்டுவதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது, துணை முதல்வர் சிவகுமார் நேற்று முன்தினம் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலடி கொடுத்து, பெங்களூரில் குமாரசாமி நேற்று கூறியதாவது:
யாரையும் மிரட்டும் கலாசாரம் எங்களுக்கு இல்லை. செட்டில்மென்ட் செய்யும் கலாசாரமும் இல்லை. அத்தகைய கலாசார பின்னணியில் இருந்து வந்தது யார்?
மிரட்டி கண்ட இடங்களுக்கு வேலி போடுவது எங்கள் வாழ்க்கையில் கிடையாது. நான் யாரையும் மிரட்டவில்லை. மிரட்டவும் மாட்டேன். ராஜ்யசபா தேர்தலுக்காக, மனசாட்சி ஓட்டுகளை கேட்டுள்ளோம்.
ஆனால், அவரோ பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை அருகில் வைத்திருப்பது தவறு இல்லையா. ராமர் நகரில் அதிகாரிகளை மிரட்டி, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு, துணை முதல்வர் சிவகுமார் பட்டாளம் தான் பாதுகாப்பு அளிக்கின்றனர்.
இந்த அரசு, அதிகாரிகளை அடிமைகளாக நடத்துகிறது. பெங்களூரில் இருந்து போன் போனால், ராம்நகர் அதிகாரிகள் நடுங்குகின்றனர். அமர்ந்த இடத்தில் இருந்தே எழுந்து சல்யூட் அடிக்கின்றனர்.
ராம்நகர் போலீஸ் அதிகாரியை கண்டித்து, வக்கீல்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதை கண்டுகொள்ள வேண்டாம் என்று போலீசாருக்கு பெங்களூரில் இருந்து உத்தரவு செல்கிறது.
போராட்டம் நடந்த இடத்துக்கு, நானும், எதிர்க்கட்சி தலைவர் அசோக்கும், நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றோம். கொள்ளையர்கள், பூட்டை உடைப்பதை பார்த்துள்ளோம். ஆனால், ராம்நகரில் போலீசாரே பூட்டை உடைத்துஉள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

