ADDED : பிப் 15, 2024 01:05 AM

புதுடில்லி, முன்னாள் பிரதமர் லால்பகதுார் சாஸ்திரியின் பேரன்விபாகர் சாஸ்திரி, காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார்.
முன்னாள் பிரதமர் லால்பகதுார் சாஸ்திரியின் பேரனும், ஹரி கிருஷ்ண சாஸ்திரியின் மகனுமான விபாகர் சாஸ்திரி, காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.
தோல்வி
இது தொடர்பாக விபாகர் சாஸ்திரி காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'நான் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன்' என தெரிவித்துள்ளார். இவர் முந்தைய லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.
காங்.,கில் இருந்து விலகிய நிலையில், உத்தர பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக், உ.பி., பா.ஜ., தலைவர் பூபிந்தர் சிங் ஆகியோர் முன்னிலையில் நேற்று பா.ஜ.,வில் இணைந்தார்.
அதன் பின் அவர் கூறுகையில், ''பிரதமர் மோடியின், 'அனைவரும் இணைவோம்; அனைவரும் உயர்வோம்' என்ற கோஷம், மத்தியிலும், மாநிலங்களிலும் பா.ஜ., அரசை வழிநடத்துகிறது. இதில் அனைத்து மாநிலங்களும் ஈர்க்கப்பட்டுஉள்ளன,'' என்றார்.
பின்னடைவு
சமீப காலமாக காங்கிரசில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறி வருகின்றனர்.
அசோக் சவான், மிலிந்த் தியோரா, பாபா சித்திக், ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாத், பிரியங்கா சதுர்வேதி, சுஷ்மிதா தேவ், ஆர்.பி.என்.சிங்., உள்ளிட்டோர் காங்கிரசில் இருந்து விலகி பல்வேறு கட்சிகளில் சேர்ந்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் லால்பகதுார் சாஸ்திரி பேரன் விலகியிருப்பது கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

