ADDED : ஜன 25, 2024 04:41 AM
பெங்களூரு : லால்பாக் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட மலர் கண்காட்சி மீது பொதுமக்கள் ஆர்வம் காண்பிக்கவில்லை.
சுதந்திர தினம், குடியரசு தின நாட்களில் பெங்களூரின் லால்பாக் பூங்காவில், தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி ஏற்பாடு செய்வது வழக்கம்.
அது போன்று இம்முறை குடியரசு தினத்தை முன்னிட்டு, மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 18ல் மலர் கண்காட்சி துவங்கப்பட்டது.
இம்முறை மலர் கண்காட்சி, பசவண்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பூக்களால் அவரது உருவம், அனுபவ மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சிக்கு ஆறு லட்சம் பேர் வருகை தரலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் 1.17 லட்சம் பேர் மட்டுமே வந்துள்ளனர்.
வார இறுதி நாட்களிலும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கவில்லை. டிக்கெட் கட்டணமாக 64.58 லட்சம் ரூபாய் வசூலானது.
இதுகுறித்து, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மலர் கண்காட்சி ஜனவரி 28ல் முடிவடையும். நாங்கள் எதிர்பார்த்த அளவில், பொதுமக்கள் வரவில்லை.
தினமும் 42 முதல் 43 ஆயிரம் பேர் வருவர் என, நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் வரவில்லை.
ஜனவரி 26 குடியரசு தின அரசு விடுமுறை, வார இறுதி நாட்கள் வருவதால், மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கூறினார்.