ADDED : ஜன 29, 2024 05:09 AM

பீஹாரில், 2020 சட்டசபை தேர்தலில், பா.ஜ., ஆதரவுடன் கூட்டணி அரசு அமைத்த ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார், கருத்து வேறுபாடால் அக்கூட்டணியில் இருந்து விலகி, 2022ல், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ஆதரவுடன் மீண்டும் முதல்வர் ஆனார்.
தொடர்ந்து, லாலு மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வரானார். இந்நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் ஏற்பட்ட பிரச்னையால், மீண்டும் முதல்வர் பதவியை, நிதீஷ் குமார் நேற்று ராஜினாமா செய்தார்.
இது தொடர்பாக, லாலு பிரசாத்தின் மகள் ரோஹிணி ஆச்சார்யா, சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், 'குப்பை, குப்பைத் தொட்டிக்கு போய் விட்டது' என, நிதீஷ் குமாரை விமர்சித்துள்ளார்.
சமீபத்தில், சமூக வலைதளத்தில் வெளியிட்ட மற்றொரு பதிவிலும், நிதீஷ் குமாரை கடுமையாக தாக்கி ரோஹிணி ஆச்சார்யா பதிவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அந்தப் பதிவை அவர் நீக்கினார்.