ADDED : நவ 28, 2025 06:20 AM

பாட்னா: பீஹார் அரசு உத்தரவு பிறப்பித்தாலும், முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு வீட்டை காலி செய்ய மாட்டார் என்று, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.
பீஹாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது.
முன்னாள் முதல்வர்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள பங்களாக்களில், அவர்கள் தங்கள் ஆயுள் முழுதும் தங்கியிருக்கலாம் என்ற சட்டம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ரப்ரி தேவியை, பாட்னாவின் சர்குலர் சாலையில் உள்ள அரசு பங்களாவில் இருந்து காலி செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பான நோட்டீஸ் சமீபத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டது.
இதற்கு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கட்சியின் மாநிலத் தலைவர் மன்கனி லால் கூறியுள்ளதாவது:
அரசு பங்களாவை ரப்ரி தேவி காலி செய்ய மாட்டார். இந்த விவகாரத்தில் நாங்கள் எதையும் சந்திக்க தயார். பிரதமர் நரேந்திர மோடியை தாஜா செய்வதற்காக எங்கள் தலைவரை, முதல்வர் நிதிஷ் குமார் அவமதிக்கிறார்.
தேர்தலில் நாங்கள் தோல்வியை சந்தித்ததால் எங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். எதிர்க்கட்சியாக, நாங்களே சட்டசபையில் அமரப் போகிறோம். ஆளும் தே.ஜ., கூட்டணி இதை மறந்துவிடக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

