இடுக்கியில் நிலம் சட்ட திருத்த விதி வகுக்கப்படும்: கேரள முதல்வர் பினராயிவிஜயன் உறுதி
இடுக்கியில் நிலம் சட்ட திருத்த விதி வகுக்கப்படும்: கேரள முதல்வர் பினராயிவிஜயன் உறுதி
ADDED : ஏப் 30, 2025 06:54 AM

மூணாறு: '' இடுக்கி மாவட்டத்தில் நிலம் சட்ட திருத்த விதிகள் மே இறுதிக்குள் வகுக்கப்படும்'' என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரளாவில் இடதுசாரி கூட்டணி அரசு தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்து நிலையில் நான்காம் ஆண்டு விழா  மாநிலம் முழுவதும் அரசு சார்பில்  நடத்தப்பட்டு  வருகிறது.
இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டத்தில்  நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தலைமையில் விழா நடந்தது.
விழாவை துவக்கி வைத்து முதல்வர் பேசியதாவது:
இடுக்கி மாவட்டத்தில் நிலம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது அரசின் நோக்கம் என்பதால், அதற்கான சட்ட திருத்த விதிகள் மே இறுதிக்குள் வகுக்கப்படும். மாநிலம் கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் திட்டங்களை செயல்படுத்துவது இல்லை.  நிதி நெருக்கடி கடுமையாக நிலவுகிறது என  சிலர் மனப்பூர்வமாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
மாநிலத்தில் சுய வருவாய் 2016ல் 26 சதவீதம்  இருந்த நிலையில் தற்போது 73 சதவீதமாக அதிகரித்தது. கடந்த 3 ஆண்டுகளில் தனிநபர் வரி வருவாய் மிகவும் அதிகரித்தது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல திட்டங்களின் செலவுகளை பகிர்ந்து கொண்ட நிலையில்  கேரளாவின் பங்கு அதிகரித்து, மத்திய அரசின் பங்கு குறைந்து விட்டது. கடந்த நிதியாண்டில் செலவில்  70 சதவீதம்  மாநிலம் ஏற்க வேண்டியது வந்தது. இது நடப்பு நிதியாண்டில் 75 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது,  என்றார்.

