சபரிமலையில் ஜனாதிபதி முர்மு தரிசனம்: இருமுடி சுமந்து 18 படியேறி வழிபாடு
சபரிமலையில் ஜனாதிபதி முர்மு தரிசனம்: இருமுடி சுமந்து 18 படியேறி வழிபாடு
UPDATED : அக் 23, 2025 03:13 AM
ADDED : அக் 22, 2025 11:32 PM

பத்தனம்திட்டா: பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், இருமுடி சுமந்து சென்று ஜனாதிபதி திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்தார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில், ஐப்பசி மாத பூஜையையொட்டி, கடந்த 17ல் திறக்கப்பட்டது. கடைசி நாளான நேற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு சென்றார்.
கார் மூலம் பம்பை நதிக்கரையை அடைந்த ஜனாதிபதி முர்மு, பாரம்பரிய முறைப்படி நதியில் இறங்கி கால்களை மட்டும் நனைத்து வழிபாடு செய்தார்.
அய்யப்ப பக்தர்கள் போல, ஜனாதிபதி முர்முவும், கழுத்தில் மணி மாலை அணிந்து, கருப்பு ஆடை உடுத்தி, பம்பையில் இருமுடி கட்டிக் கொண்டு, கன்னிசாமியாக தன் முதல் சபரிமலை யாத்திரையை துவங்கினார்.
கன்னிமூல கணபதி கோவில் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி, குருசாமியாக இருந்து, இருமுடியை கட்டி, ஜனாதிபதி முர்முவை மலையேற அனுப்பி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, சிறப்பு வாகனம் மூலம் சன்னிதானத்தை அடைந்த ஜனாதிபதி முர்மு, இருமுடியை சுமந்தபடி பதினெட்டு படியேறி, கொடி மரம் அருகே வந்தார். அப்போது கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ஆகியோர் பூரண கும்ப மரியாதை அளித்து அவரை வரவேற்றனர்.
பின், கொடிமரம் அருகே உள்ள வாசல் வழியாக சென்று சுவாமி அய்யப்பனை பக்தியுடன் வழிபட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் செய்தார்.
பாதுகாவலர்களும் இருமுடி சுமந்து வந்து இருந்தனர். பின்னர் அவர்களது இருமுடிகள் பிரிக்கப்பட்டு, அதில் இருந்த நெய் தேங்காய்களை உடைத்து, சுவாமி அய்யப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மலையில் உள்ள மாளிகைபுறத்தம்மன், கொச்சு கடுத்த சுவாமி, மணி மண்டபம், நவக்கிரக கோவில்களிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் செய்தார்.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு விருந்தினர் விடுதியில் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுத்த ஜனாதிபதி முர்மு, மதிய உணவுக்குப் பின், சபரிமலை யாத்திரை முடித்துக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஜனாதிபதியின் வருகையையொட்டி, சபரிமலை முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பக்தர்களுக்கு, இரு நாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி சுமந்து சென்று வழிபாடு நடத்திய முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை முர்மு பெற்றார். இதற்கு முன், 1970களில் முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரி, பம்பையில் இருந்து டோலி மூலம் சென்று சுவாமி அய்யப்பனை தரிசித்தார்.
சபரிமலை யாத்திரைக்காக நான்கு நாள் பயணமாக கேரளாவுக்கு வந்துள்ள ஜனாதிபதி முர்மு, இன்று ராஜ்பவனில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனின் சிலையை திறந்து வைக்கிறார். நாளை எர்ணாகுளம் செல்லும் அவர், செயின்ட் தெரசா கல்லுாரியின் நுாற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார்.