ADDED : அக் 22, 2025 11:28 PM
புதுடில்லி: டில்லியில், சக ஊழியர் முன்னால் கன்னத்தில் சரமாரியாக அறைந்த உரிமையாளரை பழி வாங்கும் வகையில், அவரின், 5 வயது மகனை கடத்திக் கொன்ற டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
டில்லியின் நரேலா பகுதியில், தொழிலதிபர் ஒருவர் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரிடம் ஆறு கார்கள் உள்ளன. நீத்து மற்றும் வாசிம் ஆகியோர் அவரிடம் ஓட்டு நர்களாக இருந்தனர்.
கடந்த, 19ம் தேதி குடிபோதையில் இருந்த நீத்து மற்றும் வாசிம் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி சண்டையிட்டுக் கொண்டனர். அப்போது, நீத்து, வாசிமை அடித்ததாக கூறப்படுகிறது.
இருவரையும் கூப்பிட்டு கண்டித்த தொழிலதிபர், நீத்துவை வாசிம் முன்னிலையில் கன்னத்தில் நான்கு முறை அறைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த தொழிலதிபரின் 5 வயது மகன், திடீரென மாயமானான். பல இடங்களில் தேடிய பெற்றோர் மற்றும் உறவினர்கள், போலீசில் புகார் அளித்தனர்.
தீவிர தேடுதல் வேட்டையில், நீத்து வசித்து வந்த வாடகை வீட்டில் சிறுவன் பேச்சு மூச்சின்றி மயக்க நிலையில், உடலில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டான். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தன்னை கன்னத்தில் அறைந்த உரிமையாளரை பழி வாங்கும் விதமாக, அவரின் 5 வயது மகனை நீத்து, கடத்தி கொன்றது தெரியவந்துள்ளது.
சிறுவனின் உடலில் செங்கல்லால் தாக்கப்பட்ட தடயமும், கத்தி குத்து காயங்களும் இருந்ததாக தெரிவித்த போலீசார், தப்பியோடிய நீத்துவை தேடி வருகின்றனர்.