நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்தவருக்கு அரசு வேலை: பணியில் சேர்ந்த ஸ்ருதி மகிழ்ச்சி
நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்தவருக்கு அரசு வேலை: பணியில் சேர்ந்த ஸ்ருதி மகிழ்ச்சி
UPDATED : டிச 09, 2024 09:28 PM
ADDED : டிச 09, 2024 09:23 PM

வயநாடு:நிலச்சரிவில் சிக்கி குடும்பத்தையும், சாலை விபத்தில் வருங்கால கணவரையும் இழந்த கேரள பெண் ஸ்ருதி இன்று அரசு பணியில் சேர்ந்தார்.
கடந்த ஜூலை மாதம் நடந்த வயநாடு நிலச்சரிவில், மெப்பாடி பஞ்சாயத்தில் உள்ள சூரல்மலா மற்றும் முண்டக்கை கிராமங்கள் புதையுண்டன. ஸ்ருதி குடும்பத்தினர் 9 பேரில் அவரை தவிர அனைவரும் மண்ணில் புதைந்தனர். நிலச்சரிவில் ரூ. 4 லட்சம் ரொக்க பணமும் 15 சவரன் நகைகளும், புதிதாக கட்டிய வீடும் அடித்து செல்லப்பட்டது.
அவருக்கு ஒரே ஆறுதலாக, திருமணம் நிச்சயக்கப்பட்ட காதலன் மட்டுமே இருந்தார்.
குடும்பத்தினர் இல்லாத நிலையில், திருமண ஏற்பாடுகள் நடந்தன. ஜூன் 2 அன்று ஸ்ருதியுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. அந்த துயரமான காலங்களில் காதலர் ஜென்சன் மட்டுமே ஸ்ருதிக்கு ஆதரவாக இருந்தார்.
ஆனால் துரதிஷ்டவசமாக, திருமணத்துக்கு சில நாட்கள் முன்னதாக
அவரும் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இதனால், ஆதரவுக்கு யாரும் இன்றி ஸ்ருதி நிர்க்கதியாக நின்றார்.
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசு நிவாரணங்கள் வழங்கியது.
அப்போது தனது குடும்பத்தையும், வருங்கால கணவரையும் இழந்து தவித்த ஸ்ருதியின் நிலை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு அரசு வேலை வழங்க முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்தார்.
அதன்படி, அவருக்கு வருவாய் துறையில் கிளார்க் பணி வழங்கப்பட்டது. ஸ்ருதி பணியில் இன்று சேர்ந்து மகிழ்ச்சி அடைந்தார்.
கிளார்க் பணியில் சேர்ந்த ஸ்ருதி கூறியதாவது:
எனது குடும்பத்தையும், கணவரையும் இழந்து தவித்து வந்த நிலையில், அரசும், ஆதரவாக இருந்த அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.
நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லமுடியாது. ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்.எனது கணவர் ஜென்சன் உடன் சென்றபோது ஏற்பட்ட சாலைவிபத்தில் எனது உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது. உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் நான் எனது பணியை தொடர்ந்து திறம்பட செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு ஸ்ருதி கூறினார்.