நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோர் கடன் தள்ளுபடியில் சிக்கல்
நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோர் கடன் தள்ளுபடியில் சிக்கல்
ADDED : ஏப் 11, 2025 03:46 AM

கொச்சி: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யும்படி மத்திய அரசு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கோரிக்கை வைக்கலாமே என, கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரளாவின் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில், முண்டக்கை மற்றும் சூரல்மலை என்ற இரு கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இதில், 200 பேர் உயிரிழந்தனர்; நுாற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். கேரளாவில் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றமே பொதுநல மனுவாக விசாரித்து வருகிறது.
இதன் விசாரணையின் போது, நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதில் அளித்த மத்திய அரசு தரப்பு, 'வங்கி கடன்களை தள்ளுபடி செய்யும்படி வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி கோரிக்கை வைக்க முடியாது' என சமீபத்தில் தெரிவித்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கூறியதாவது: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் மாநில அரசு வங்கிகளில் வாங்கிய கடன்களை கேரள அரசு தள்ளுபடி செய்துள்ளது.
இதை ஏன் மற்ற வங்கிகள் செய்யக்கூடாது? வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட முடியாவிட்டால், மத்திய அரசு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிடலாமே. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

