மொழிபோரான 'சீட்' பிரச்னை மும்பை புறநகர் ரயிலில் பரபரப்பு
மொழிபோரான 'சீட்' பிரச்னை மும்பை புறநகர் ரயிலில் பரபரப்பு
ADDED : ஜூலை 21, 2025 12:24 AM
மும்பை: மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், புறநகர் ரயிலில் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிலும், மகளிர் பெட்டியில் நிற்பதற்கு கூட இடமில்லை.
அப்போது, இரண்டு பெண்களுக்கு இடையே இருக்கையில் அமர்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு பெண் ஹிந்தியில் பேச ஆரம்பித்ததும், பெட்டியில் இருந்த மற்றொரு பெண் மராத்தியில் பேசுமாறு கத்தினார்.
ஆனாலும், அந்த பெண் ஹிந்தியிலேயே பதில் அளித்தார்.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மராத்திய பெண், 'மும்பையில் இருக்க வேண்டுமெனில் மராத்தியில் பேசு; இல்லாவிட்டால் இங்கிருந்து வெளியேறி விடு' என கண்கள் சிவக்க ஆவேசமாக கத்தினார்.
அப்போது, உடனிருந்த சில பயணியரும் மராத்திய பெண்ணுக்கு ஆதரவாக குரல் எழுப்பி சண்டையிட்டனர்.
மஹாராஷ்டிராவில் ஹிந்தியை ஆரம்பப் பள்ளிகளில் கட்டாயமாக்குவது தொடர்பாக, அரசியல் கட்சிகள் இடையே ஏற்கனவே கருத்து மோதல் உள்ளது.
மராத்தியில் பேசுமாறு ஆட்டோ டிரைவர் உட்பட பலரிடம், சில அரசியல் கட்சியினர் சண்டையிட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்நிலையில், புறநகர் ரயிலில் இரண்டு பெண்களுக்கு இடையே நடந்த இந்த மோதல் குறித்த வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.