சட்ட கல்லுாரி மாணவி கூட்டு பலாத்காரம்: திரிணமுல் நிர்வாகி உட்பட 3 பேர் கைது
சட்ட கல்லுாரி மாணவி கூட்டு பலாத்காரம்: திரிணமுல் நிர்வாகி உட்பட 3 பேர் கைது
ADDED : ஜூன் 28, 2025 01:07 AM

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், சட்டக் கல்லுாரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், ஆளும் திரிணமுல் காங்., நிர்வாகி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
இங்கு தலைநகர் கொல்கட்டாவில், தெற்கு கொல்கட்டா சட்டக் கல்லுாரி இயங்கி வருகிறது.
கொலை மிரட்டல்
இங்கு படிக்கும் 24 வயதான மாணவி ஒருவர், தேர்வு தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க, கடந்த 25ம் தேதி கல்லுாரிக்கு வந்தார். கல்லுாரியின் யூனியன் அறையில், அவர் தனியாக அமர்ந்திருந்தார்.
இதையறிந்த கல்லுாரியின் முன்னாள் மாணவரும், தற்போது அங்கு பணிபுரிபவரும், ஆளும் திரிணமுல் காங்., மாணவர் பிரிவு நிர்வாகியுமான மோனோஜித் மிஸ்ரா, 31, அந்த மாணவியை மிரட்டி வலுக்கட்டாயமாக, கல்லுாரி வளாகத்தில் உள்ள பாதுகாவலரின் அறைக்கு அழைத்துச் சென்றார்.
அதே கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் ஜைப் அகமது, 19, பிரமித் முகர்ஜி, 20, ஆகியோருடன் சேர்ந்து, அந்த மாணவியை மோனோஜித் மிஸ்ரா பாலியல் பலாத்காரம் செய்தார்.
'இதை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவோம்' என, மூன்று பேரும் மிரட்டினர்.
பாதிக்கப்பட்ட மாணவி கொல்கட்டா போலீசில் புகார் அளித்தார்.
வழக்குப் பதிந்த போலீசார், மோனோஜித் மிஸ்ரா, மாணவர்கள் ஜைப் அகமது, பிரமித் முகர்ஜி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, 'மொபைல் போன்'களையும் பறிமுதல் செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூன்று பேரையும், ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ., மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி, “இதற்கு காவல் துறையே முழு பொறுப்பு. ஒட்டுமொத்த கொல்கட்டா போலீசாரும் திகா ஜெகன்னாதர் ரத யாத்திரை விழாவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல்வர் பதவியில் இருக்க மம்தா பானர்ஜிக்கு தகுதி இல்லை,” என்றார்.
அதிர்ச்சி
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிந்த தேசிய மகளிர் கமிஷன், இதுகுறித்து மூன்று நாட்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, கொல்கட்டா போலீஸ் கமிஷனர் மனோஜ் குமார் வர்மாவுக்கு உத்தரவிட்டது.
கொல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், கடந்தாண்டு ஆகஸ்டில், பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது சட்டக் கல்லுாரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.