எச்சரிக்கை மணி அடிக்கும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: சொல்கிறார் பினராயி விஜயன்
எச்சரிக்கை மணி அடிக்கும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: சொல்கிறார் பினராயி விஜயன்
ADDED : டிச 13, 2025 07:26 PM

திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை. தோல்வி குறித்து விரிவாக ஆராயப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறி உள்ளார்.
கேரளாவில் இரு கட்டங்களாக நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுப்பதிவு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆளும் இடதுசாரிகள் ஜனநாயக முன்னணிக்கு பெரும் நெருக்கடியாக அமைந்தது.
காங்கிரஸ் கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களில் வென்றுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திருவனந்தபுரம் மேயர் தேர்தலில் பாஜ கூட்டணி வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
ஆளும் கூட்டணி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;
தேர்தலில் இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி, பெருவெற்றியை எதிர்பார்த்தது. ஆனால் அந்த முன்னேற்றத்தை அடைய முடியவில்லை. இதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி விரிவாக ஆராயப்படும். தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பின்னர் மீண்டும் முன்னேறுவோம்.
வகுப்புவாத சக்திகளின் தவறான தகவல், பிளவு தந்திரங்களுக்கு மக்கள் பலியாகி விடாமல் இருப்பதை உறுதி செய்ய, அதிக விழிப்புணர்வு தேவை என்பதற்கான எச்சரிக்கையாக தேர்தல் முடிவுகள் உள்ளன.
அனைத்து வகையான வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்பதின் அவசியம், இந்த தேர்தல் முடிவுகள் மூலம் அடிக்கோடிட்டு காட்டப்பட்டு உள்ளது.
மக்களின் ஆதரவுடன் முன்னேற, இடதுசாரிகள் ஜனநாயக முன்னணியானது விரிவாக விவாதித்து, முடிவுகளை எடுக்கும். வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்த மக்கள் ஆதரவை மேலும் வளப்படுத்தவும், அதன் அடிப்படையை பலப்படுத்தவும் உறுதியுடன் செயல்படுவோம்.
இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

