மங்களூரில் காங்., தொண்டர்கள் மாநாடு தேர்தல் முழக்கம் இட்ட தலைவர்கள்
மங்களூரில் காங்., தொண்டர்கள் மாநாடு தேர்தல் முழக்கம் இட்ட தலைவர்கள்
ADDED : பிப் 18, 2024 02:41 AM

மங்களூரு : மங்களூரில் காங்கிரஸ் தொண்டர்கள் மாநாடு நடத்தி, லோக்சபா தேர்தலுக்கு அக்கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தி, தலைவர்கள் முழக்கம் இட்டனர்.
கர்நாடகாவில் கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், முதல் வாக்குறுதித் திட்டத்தை, எம்.பி., ராகுல் அறிவித்தார்.
இதனால், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததாக அக்கட்சி தலைவர்கள் நம்புகின்றனர்.
ராசியான இடம்
இதேபோன்று, லோக்சபா தேர்தலுக்கும் மங்களூரில் தொண்டர்கள் மாநாடு நடத்த காங்கிரஸ் திட்டமிட்டது. அதன்படி, நகரின் அட்யார் மைதானத்தில் நேற்று தொண்டர்கள் மாநாடு நடத்தப்பட்டது.
மாநாட்டை, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே துவக்கி வைத்து பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஊடகம், நீதி, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகிய துறைகளை கட்டுக்குள் கொண்டு வந்து, நாட்டை கட்டுப்படுத்த மோடி புறப்பட்டுள்ளார்.
பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போட்டு, அவரை மேலும் பலசாலி ஆக்க வேண்டாம். ஆண், பெண், ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் என அனைவருக்கும் சம உரிமை கொடுத்தது காங்கிரஸ் கட்சி தான்.
இதனால், இந்தியா உலகின் மிக பெரிய ஜனநாயக நாடாக திகழ்கிறது. அபாயத்தில் தள்ளப்பட்டுள்ள ஜனநாயகத்தை தற்போது காப்பாற்ற வேண்டும். இது காங்கிரசால் மட்டுமே முடியும்.
காங்., திட்டங்கள்
காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களால் பலரும் பயனடைந்துள்ளனர். எங்கள் திட்டங்களால் நில உரிமையாளர் ஆனவர்கள், உணவு சாப்பிட்டவர்கள், கல்வி கற்றவர்கள், எங்களை சும்மா திட்டுகின்றனர்.
உங்களின் இந்த நல்ல நிலைமைக்கு யார் காரணம் என்று உங்கள் பெற்றோரை கேளுங்கள்.
ஆனால், மங்களூரு பகுதிகளில் மோடிக்கு ஆதரவு கோஷம் போடுகின்றீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்?
மோடி என்ன நிலம் கொடுத்தாரா, உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்தாரா, 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தினாரா. ஆனாலும், இந்த பகுதியில் பா.ஜ., கொடி பறப்பது ஏன்?
தேர்தல் பத்திரம் மூலம், பா.ஜ.,வினர் 6,000 கோடி ரூபாய் கருப்பு பணத்தை வைத்துள்ளனர்.
ஆனால், காங்கிரஸ் பணத்தை ஒழிக்க முற்பட்டுள்ளனர். கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கினர். மக்கள் எதிர்ப்பால், மீண்டும் செயல்படுத்தினர்.
இவ்வாறு அவர் பேசினார்.
அனைத்து அமைச்சர்கள், பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எஸ்.பி.ஜி., எனும் சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், பெங்களூரு சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டை சுற்றி, நவீன துப்பாக்கி கொண்ட எஸ்.பி.ஜி., படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மங்களூருக்கும் வந்தனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன் மோடி அறிவித்த வாக்குறுதிகள் ஏதேனும் நிறைவேற்றப்பட்டுள்ளதா? வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்று கூறியவர், தற்போது மோடி வாக்குறுதி என்று அறிவிப்பது ஏன்? எங்கள் வார்த்தையை அவர் திருடிவிட்டார்.
சித்தராமையா,
முதல்வர்
சட்டசபை தேர்தலில் கடலோர பகுதிகளில் பின்னடைவு ஏற்பட்டதால், தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வைக்கும் சக்தி உங்களிடம் உள்ளது. மாநிலத்தில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.
சிவகுமார்,
துணை முதல்வர்