வனப்பகுதியில் விடப்பட்ட சிவிங்கிபுலி குட்டி உயிரிழப்பு
வனப்பகுதியில் விடப்பட்ட சிவிங்கிபுலி குட்டி உயிரிழப்பு
ADDED : டிச 07, 2025 05:21 AM

ஷியோபூர்: மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில், அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட சிவிங்கி புலிக் குட்டி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
நம் நாட்டில், 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து வந்த சிவிங்கி புலிகளை மீட்டெடுக்கும் வகையில், தென்னாப்ரிக்கா மற்றும் நமீபியாவில் இருந்து, கடந்த, 2022ல் சிவிங்கிபுலிகள் கொண்டு வரப்பட்டன.
அதிர்ச்சி மத்திய பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்ட சிவிங்கிபுலிகள், சில குட்டிகளை ஈன்றன.
பாதுகாப்பான பகுதி யில் பராமரிக்கப்பட்டு வரும் சிவிங்கி புலிகள், சில மாதங்களுக்கு பின் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப் படுகின்றன.
கடந்த, 4ம் தேதி சர்வதேச சிவிங்கிபுலிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், வீரா என்ற தாய் சிவிங்கிபுலியும், அதன் இரு குட்டிகளும் வனப்பகுதிக்குள் விடப்பட்டன.
இந்நிலையில், தாயிடம் இருந்து பிரிந்து சென்ற, 10 மாத குட்டிப் புலி ஒன்று காட்டுக்குள் மாயமானது.
இதை தேடும் பணியில் ஈடுபட்ட வனத் துறையினர், நேற்று முன்தினம் அந்த குட்டி சிவிங்கி புலியை இறந்த நிலையில் கண்டெடுத்தனர். வனப்பகுதியில் விட்ட ஒரே நாளில், சிவிங்கிபுலி குட்டி உயிரிழந்தது வனத் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உடற்கூராய்வு இது குறித்து குனோ தேசிய பூங்காவின் ஊழியர் ஒருவர் கூறுகையில், 'சிவிங்கிபுலி குட்டி இறந்ததற்கான காரணம் உடற்கூராய்வு அறிக்கைக்கு பின்னரே தெரியவரும்.
'வீராவும், அதன் மற்றொரு குட்டியும் நலமாக உள்ளன. அதேபோல், பூங்காவில் உள்ள எட்டு குட்டிகள் உள்ளிட்ட, 28 சிவிங்கிபுலிகளும் உடல்நலத்துடன் இருக்கின்றன' என்றார்.

