UPDATED : ஜன 06, 2025 07:44 AM
ADDED : ஜன 06, 2025 07:36 AM

ஆமதாபாத்: குஜராத்தில், சக மான் ஒன்றை சிறுத்தை தாக்கிக் கொன்றதை நேரில் கண்ட பிளாக்பக் வகையைச் சேர்ந்த ஏழு மான்கள் அதிர்ச்சியில் உயிர்விட்ட சம்பவம், வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலை அருகே ஜங்கிள் சபாரி வனவிலங்கு பூங்கா உள்ளது. இங்கு ஏராளான மான்கள், பறவைகள் உள்ளன. இந்த பூங்கா மிக முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகின்றது.
இங்கு, கடந்த ஜனவரி 1ம் தேதி, சக மான் ஒன்றை சிறுத்தை தாக்கிக் கொன்றதை நேரில் கண்ட பிளாக்பக் வகையைச் சேர்ந்த ஏழு மான்கள் அதிர்ச்சியில் உயிரிழந்தன. இது போன்று சம்பவம் நடப்பது முதல் முறை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து காடுகளின் துணைப் பாதுகாவலர் அக்னீஸ்வர் வியாஸ் கூறியதாவது: கெவாடியாவைச் சுற்றியுள்ள அடர்ந்த காடுகள் சிறுத்தைகளின் இருப்பிடமாக உள்ளன. பெரும்பாலும் இரவு நேரத்தில் அதிகமாக நடமாடுகின்றன. ஆனால் இதுவரை வேலியைத் தாண்டி பூங்காவிற்குள் சிறுத்தைகள் வந்தது இல்லை.
தற்போது முதல்முறையாக பூங்காவிற்குள் நுழைந்து பீதியை ஏற்படுத்தி உள்ளது. பணியில் இருந்த பாதுகாவலர்கள் விரட்ட முயற்சித்தனர். ஆனாலும், சிறுத்தை ஒரு பிளாக்பக் வகை மானை கொன்றது. இந்த அதிர்ச்சியில் மேலும் ஏழு மான்கள் உயிரிழந்துள்ளன. பூங்கா 24 மணி நேரமும் சி.சி.டிவி., கேமரா உதவி உடன் கண்காணிக்கப்படுகிறது.
சிறுத்தை எங்கே பதுங்கி இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இந்த சம்பவம் குறித்து முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் அரசிற்கு தகவல் தெரிவித்தோம். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

