ADDED : அக் 27, 2024 01:06 AM

புவனேஸ்வர்: ஒடிசாவின் புவனேஸ்வர் விமான நிலைய வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பெண் ஒருவர் கூறியதையடுத்து, அங்கு வனத்துறையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில், பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையம் உள்ளது; இதன் அருகே வனப்பகுதி உள்ளது.
விமான நிலையத்தில் துப்புரவு பணி செய்யும் பெண் தொழிலாளர் ஒருவர், சிறுத்தை ஒன்றை நேற்று காலை பார்த்ததாக உயரதிகாரிகளுக்கு தெரிவித்தார். இதையடுத்து, அந்த பகுதியில், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து விமான நிலையம் முழுதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
எனினும், இந்த தேடுதல் வேட்டையில் சிறுத்தை சிக்கவில்லை. சில இடங்களில் சிறுத்தையின் கால்தடம் பதிவாகியிருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.