ADDED : பிப் 09, 2026 12:59 AM

'கணவர் கிரிக்கெட் விளையாட்டில் அசத்துகிறார் என்றால், மனைவி அரசியலில் கலக்குகிறார்...' என, இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியும், குஜராத் அமைச்சருமான, ரிவாபா ஜடேஜா குறித்து பெருமையுடன் பேசுகின்றனர், அந்த மாநில பா.ஜ.,வினர்.
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜாம்நகர் தொகுதியிலிருந்து, பா.ஜ., சார்பில் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட ரிவாபா, தற்போது பள்ளிக்கல்வி துறை இணை அமைச்சராக பதவி வகிக்கிறார்.
சமீபத்தில், குஜராத்துக்கு வந்திருந்த காங்கிரஸ் எம்.பி., ராகுல், 'குஜராத்தில், சட்டம் - ஒழுங்கு மோசமாகி விட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங் கள் அதிகரித்து விட்டன...' என, ஆவேசமாக பேசினார்.
இதற்கு, ரிவாபா ஜடேஜா பதிலடி கொடுத்தார். 'நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்றால், அது குஜராத் தான். நாடு முழுதும் பதிவான பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகளின் புள்ளி விபரங்களை பாருங்கள்.
'வாய்க்கு வந்ததை ராகுல் பேசக்கூடாது... கடந்த, 2022ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வரும், 2027ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், அந்த கட்சியால் இரட்டை இலக்கத்தை கூட, எட்ட முடியாது...' என்றார், ரிவாபா.
'கிரிக்கெட் விளையாட்டில் இவரின் கணவர், பந்து களை அடித்து விளையாடுகிறார். மனைவி, அரசியலில் வெளுத்துக் கட்டுகிறார்...' என, ரிவாபாவை பாராட்டுகின்றனர், குஜராத் பா.ஜ., நிர்வாகிகள்.

