sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விடுங்கள்! பெற்றோருக்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் அறிவுரை

/

பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விடுங்கள்! பெற்றோருக்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் அறிவுரை

பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விடுங்கள்! பெற்றோருக்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் அறிவுரை

பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விடுங்கள்! பெற்றோருக்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் அறிவுரை


ADDED : டிச 21, 2024 02:35 AM

Google News

ADDED : டிச 21, 2024 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''பிள்ளைகளை அவர்கள் போக்கில் விடுங்கள்,'' என, பெற்றோருக்கு, தமிழ் புத்தக திருவிழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் அறிவுரை வழங்கினார்.

கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு தமிழ் புத்தக திருவிழா, பெங்களூரு சிவாஜிநகர் அம்பேத்கர் வீதியில் உள்ள தி இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் நேற்று துவங்கியது.

கண்ணாடி


புத்தக திருவிழாவை இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவருமான ராம்பிரசாத் மனோகர், இந்திய பேனா நண்பர்கள் பேரவை நிறுவன தலைவர் மா.கருண், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க பொதுச் செயலர் வீராணம் சு.முருகன்.

வாசன் கண் மருத்துவமனை இயக்குனர் சுந்தர முருகேசன், டாக்டர் ஹர்ஷவர்தன், ஆர்.ஆர்.இன்டஸ்ட்ரிஸ் நிர்வாக இயக்குனர் ஆர்.துரை, தனாபிவிருத்தி கடன் கூட்டுறவு வங்கி நிறுவனர் சுந்தரவேலு, உஷா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் யு.கே.ஷெட்டி ஆகியோர் ரிப்பன் வெட்டியும், செடிக்கு தண்ணீர் ஊற்றியும் துவக்கிவைத்தனர்.

சிவன் பேசியதாவது:

மூன்றாம் ஆண்டு புத்தக திருவிழா துவங்கி உள்ளது. இது வெற்றி பெற வாழ்த்துகள். பெங்களூரில் தமிழில் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

அதுவும் புத்தக திருவிழாவில் பேசுவது மகிழ்ச்சி. நம் வாழ்க்கையில் நம்பிக்கை, வழிகாட்டுதல்களை கொடுப்பது புத்தகம் தான்.

வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் உள்ளது. வாழ்க்கையின் பல்வேறு பரிணாமத்தை காட்டுகிறது. காலம் கடந்து நிற்பதும் புத்தகம் ஒன்று மட்டும் தான்.

'டெக்னிக்கல் சிஸ்டம் இன்ஜினியரிங்' என்ற புத்தகத்தை நான் எழுதினேன். அந்த புத்தகம் இந்தியாவை விட வெளிநாட்டில் அதிக விற்பனை ஆனது. சமூகம், உலகத்தை ஒருங்கிணைக்கும் கருவியும் புத்தகம் தான்.

கலை, கவிதை, கட்டுரை, அறிவியல் என பல துறைகளில் எழுத்தாளர்கள் எழுதும், புத்தகங்கள் கிடைக்கும் ஒரே இடம் புத்தக திருவிழா தான். புத்தகம் படிப்பது மனதை வலுப்படுத்தும்; அறிவை மேம்படுத்தும்.

புத்தகம் உங்களின் சிறந்த நண்பர். உங்கள் வாழ்க்கையில் ஒளியை காட்டும். சிலர் புத்தகம் படிக்க நேரம் இல்லை என்கின்றனர். இப்போது டிஜிட்டல் வடிவில் புத்தகங்கள் வந்துவிட்டன.

புத்தகங்கள் கையில் இருந்தால் தானாக படிக்க பழகுவீர்கள். வாசிக்க ஆரம்பித்துவிட்டால் புத்தகங்களை விட முடியாது. புத்தகங்களை சரியான முறையில் படித்தால் சிந்தனை, வாழ்க்கை முறை மாறும். புத்தக எழுத்தாளர்கள் புதிய யோசனைகளை பரப்பும் நபர்களாக உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பத்திரிகைகளை பற்றியும் நாம் கண்டிப்பாக பேச வேண்டும். சமூக மேம்பாட்டிற்கு பத்திரிகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் நிலவரங்களை அறிய உதவுகிறது.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிறது. மக்கள் கருத்து தெரிவிக்கும் இடமாக உள்ளது. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை பத்திரிகைகள், தினமும் நிரூபிக்கிறது.

மண், பாறை


இந்திய விண்வெளி தொழில்நுட்பம் பல புதுமைகளை தற்போது கண்டுபிடித்து உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் என்றால் ராக்கெட் தயாரிப்பர். ராக்கெட் பறக்கும்போது, ஒரு அறையில் அமர்ந்து கைதட்டி மகிழ்ச்சி பரிமாறுவர் என்று பேசுவது உண்டு.

ராக்கெட் விடுவது மட்டும் எங்கள் வேலை இல்லை. இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்கள் பணிக்காலம் முடிந்து சென்று விடுவர்.

ஆனால் அந்த வேலைக்கு வருபவர்களுக்கு டாக்குமெண்டேசன் எனும் அடுத்த வேலைக்கான இலக்கை விட்டுச் செல்வர்.

செயற்கைக்கோள்கள் இல்லை என்றால், இந்த உலகம் ஒரு நிமிடம் கூட இயங்காது. அனைத்தும் ஸ்தம்பித்துவிடும். சந்திரயான் 1, சந்திரயான் 2, சந்திரயான் 3 வரை வந்து விட்டோம்.

இந்தியா 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, விண்வெளி துறையில் உயரிய நிலையை அடைய வேண்டும் என்பது, நமது பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம்.

சந்திரயான் 3 நிலவில் களம் இறங்கியது. ஆனால் சந்திரயான் 4 நிலவில் இறங்கி அங்கு உள்ள மண்கள், பாறைகளை அள்ளி கொண்டு வரும்.

என் வாழ்க்கையில் நினைத்தது எதுவும் நடந்தது இல்லை. சிறு வயதில் ஆசிரியராக ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை. இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

ஆனால் என் அப்பா என்னை பி.எஸ்.சி., படிக்க சொன்னார். பி.எஸ்.சி., படித்துவிட்டு எம்.எஸ்.சி., படிக்க ஆசைப்பட்டேன். அப்போது என் அப்பா இன்ஜினியரிங் படிக்க சொன்னார்.

இஸ்ரோவில் முதன் முதலாக வேலைக்கு சென்றபோது, ஜி.எஸ்.எல்.வி.,யில் பணிக்கு சேர்ந்தேன். ஜி.எஸ்.எல்.வி., திட்டம் நான்கு முறை தோல்வி அடைந்து இருந்தது. இந்த திட்டத்திலா பணியாற்ற போகிறாய் என்று, என்னை சீனியர்கள் கிண்டல் செய்தனர்.

அப்போது என் சீனியர்களிடம் சொன்னேன். 'எம்.ஜி.ஆர்., கஷ்டத்தில் இருந்த போது, நாடோடி மன்னன் படத்தை இயக்கினார். அவரிடம் சென்று அதுபற்றி சிலர் கேட்டனர். 'இந்த படம் தோல்வி அடைந்தால் நாடோடி ஆவேன். வெற்றி அடைந்தால் மன்னன் ஆவேன்' என்றார். அதுபோல நானும் இந்த திட்டத்தை நிறைவேற்றிக் காட்டுவேன்' என்று கூறினேன்.

அதேபோல் அந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டினேன்.

கூடுதல் சம்பளம்


வாழ்க்கையில் நான் நினைத்தது நடக்கவில்லை. ஆனால் எனக்கு கிடைத்தை பயன்படுத்திக் கொண்டேன்.

நீங்கள் விரும்பும் பாடம் கிடைக்கவில்லை என்றால் கிடைத்த பாடத்தை விரும்பி படியுங்கள். பிள்ளைகள் என்ன படிக்க ஆசைப்படுகின்றனரோ, அவர்களை அதையே பெற்றோர் படிக்க வையுங்கள்.

எனக்கு 2 மகன்கள். மூத்த மகன் பள்ளி முடித்ததும் என்னிடம் வந்து, 'என்ன படிப்பது?' என்று கேட்டார். 'இன்ஜினியரிங்' என்றேன். அதன்படி அவரும் படித்தார். ஆனால் இரண்டாவது மகன் என்னிடம் வந்து, 'அனிமேஷன் படிக்கப் போகிறேன்' என்றார்.

நானும் படிக்க வைத்தேன். அவர் வேலைக்கு சென்றபோது, என்னை விட கூடுதலாக சம்பளம் வாங்கினார். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் 3,000 மாணவர்களுக்கு தலா 100 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை இலவசமாக வாங்கும் கூப்பன் வழங்கும் திட்டத்தை சிவன், ராம்பிரசாத் மனோகர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சி துவங்கியதும் தமிழ், கன்னட மொழி வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.,குமார், கர்நாடக தி.மு.க., பொருளாளர் தட்சிணாமூர்த்தி, லிட்டில் பிளவர் பள்ளி தலைவர் மதுசூதனபாபு, மைசூரு தமிழ்ச்சங்க தலைவர் பிரான்சிஸ், செயலாளர் ரகுபதி, கன்னடர் தமிழர் நல்லிணக்க தலைவர் ராமசந்திரன், விஸ்வகவி திருவள்ளுவர் சங்க தலைவர் பையப்பனஹள்ளி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவருமான ராம்பிரசாத் மனோகர் பேசியதாவது:

இன்று (நேற்று) மூன்றாவது தமிழ் புத்தக திருவிழா நடக்கிறது. முதலாம் ஆண்டு நடக்கும்போது, சிறிய நிகழ்ச்சியாக இருந்தது. நிறைய பேர் ஏளனமாக பேசினர். எத்தனை ஆண்டுகள் நடக்கும் என்று பார்ப்போம் என்றனர். அவர்களின் ஏளனத்திற்கு இன்று பதில் கிடைத்துள்ளது. தமிழர்களாகிய நாம் இங்கு சிறப்பான வாழ்க்கை வாழ்கிறோம்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர், பெங்களூரில் வசதி வாய்ப்பு உள்ளவராக வாழ்கிறார். அவரது சிறிய வயதில் தந்தை இறந்துவிட்டார். அவரது தாய் பார்வதிக்கு ஒரு கண் மட்டும் இருந்தது. அந்த கண்ணுடன் மகனை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். ஒரு நாள் முருகானந்தம் பள்ளிக்கு சாப்பாடு கூடையை மறந்துவிட்டுச் சென்றார். அதை தாய் எடுத்துச் சென்றார்.

வள்ளுவர் தாத்தா

அவரது தாய்க்கு கண் இல்லாததை, முருகானந்தம் நண்பர்கள் கிண்டல் செய்தனர். இதனால் அவர் தாயை வெறுக்க ஆரம்பித்தார். பின்நாளில் அவர் நன்கு படித்து பெங்களூரு வந்து செட்டில் ஆனார். ஒரு நாள் அவர் தாய் இறந்ததாக அவருக்கு போன் வந்தது. ஊருக்கு சென்றபோது அவருக்கு ஒரு உண்மை இருந்தது.

சிறு வயதில் ஒரு விபத்தில் முருகானந்தம் ஒரு கண்ணை இழந்தார். இதனால் அவருக்கு தாய் பார்வதி தன் ஒரு கண்ணை கொடுத்தார் என்று. ஒரு கண்ணை வைத்து மகனை வளர்த்து விட்ட பார்வதியை போன்று, நம்மை வளர்க்கும் தமிழை நாம் வளர்க்க வேண்டும்.

இந்த புத்தக திருவிழாவில் தமிழ் சொந்தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டால் போதும். அதுவே பெரிய வெற்றி தான். இங்கு வசிக்கும் தமிழர்கள், தங்கள் குழந்தைகளை இங்கு அழைத்து வந்து தமிழ் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள்.

இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், தமிழ் வழி கல்வி படித்தவர். சிதம்பரனார் கப்பல் ஓட்டினார். சிவன் விண்வெளி ஓட்டியவர். அவர் நம் நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி. ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்த நானும், தமிழ் வழி கல்வி கற்று இங்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வந்து நிற்கிறேன். இது என் பாட்டி கொடுத்த சொத்தால் அல்ல.

வள்ளுவர் தாத்தா கொடுத்த திருக்குறளால். தமிழ் நமது அறிவை வளர்க்கும் பொக்கிஷம். அதை சரியாக பயன்படுத்த வேண்டும். பல நுாற்றாண்டுகள் இந்த புத்தக திருவிழா நடக்க வாழ்த்துகள். வாழ்க தமிழ்... வளர்க்க தமிழ்.

இவ்வாறு அவர் பேசினார்.

'தமிழ் நமது அறிவை வளர்க்கும் பொக்கிஷம்'








      Dinamalar
      Follow us