ADDED : மார் 18, 2025 10:43 PM

கலபுரகி : ''புதிதாக ஒரு பிராந்திய கட்சியை உருவாக்கி ஆட்சியை பிடிப்போம்,'' என, விவசாய சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் கூறி உள்ளார்.
கலபுரகியில் அவர் அளித்த பேட்டி;
மாநிலத்தில் காங்., -பா.ஜ., -ம.ஜ.த., உள்ளிட்ட எந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் விவசாயிகள், தொழிலாளிகள், சாமானிய மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுவதில்லை.
இது போன்ற சூழல் தான் இன்று நிலவுகிறது. இதனால், விவசாயிகள் சங்கம், கன்னட அமைப்பு, தலித் இயக்கம், பெண்கள், மாணவர்கள் இயக்கம் உள்ளிட்ட அனைத்தையும் ஒருங்கிணைத்து பிராந்திய கட்சி உருவாக்கப்பட உள்ளது.
இதற்கு 'நவ கர்நாடக நிர்மாண் அந்தோலனா' என பெயர் சூட்டப்படும். தற்போது நடைமுறையில் உள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதாவை திரும்பப் பெற சித்தராமையா அரசு தவறிவிட்டது.
மாநிலத்தில் 2013ல் வறட்சி ஏற்பட்டபோது, சித்தராமையா மத்திய அரசிடம் இருந்து 3,400 கோடி ரூபாய் நிவாரணம் பெற்று விவசாயிகளுக்கு வழங்கினார். தற்போது அது போன்று ஏன் செய்யவில்லை? கலபுரகி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.