ADDED : ஜன 07, 2024 12:46 AM

சென்னையைச் சேர்ந்த, 'டெர்பி' நிறுவனத்தின் நிறுவனர் விஜய் கபூர் -- ராக்கி தம்பதி:
ராக்கி: இவர், 16 வயதில் எனக்கு அறிமுகம் ஆனார். அறிமுகமான ஒரு ஆண்டிலேயே, இவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துட்டேன்.
ஆனால், அவரோ அம்மா சொல்லும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவில் இருந்தார். நான் படிப்பதற்காக, கோல்கட்டா சென்று விட்டேன்; அந்தப் பிரிவு இவருக்கு என் மீது காதலை வர வைத்திருக்கிறது.
என்னை பெண் கேட்டு வந்தபோது, சின்னதாக டெய்லர் கடை தான் வைத்திருந்தார். 'டெய்லரை திருமணம் பண்ணிக்கப் போறியா... ஒரு வருஷத்துல விவாகரத்து வாங்கிட்டு வந்துருவ' என்று, எங்கள் வீட்டில் பயங்கர எதிர்ப்பு.
ஆனால், திருமணம் பண்ணிக்கிட்டோம். அந்த நம்பிக்கை எங்க காதலை மட்டுமில்ல, எங்களோட கேரியரையும் உயர்த்தியிருக்கு.
விஜய் கபூர்: ராக்கி, என் வாழ்க்கையில் வந்த பின் தான் என்னையே ரசிக்க துவங்கினேன். என்னை நம்பி வந்தவங்களை, நல்லா பார்த்துக்கணும், எல்லா வசதிகளோட வாழ வைக்கணும்னு நினைச்சேன்.
கடுமையாக உழைத்து, டெர்பி பிராண்டை துவங்கினேன். பிசினஸ் கொஞ்சம் கொஞ்சமாக சக்சஸ் ஆச்சு.
சொந்த வீடு, கார் என்று வாழ்க்கை வசதியா மாறுச்சு. இதெல்லாம் மனைவியை சந்தோஷமா வைக்கும் என்று நினைத்தேன். நாம தான் சிறந்த கணவர் என்று ரொம்ப கம்பீரமாக சுத்திக்கிட்டு இருந்தேன்.
அப்போது தான் என் எண்ணத்தை சுக்குநுாறாக உடைக்கிற மாதிரி, 'நீங்க உங்கள லவ் பண்றீங்க; என்னை இல்ல. எனக்கு விவாகரத்து வேணும்'னு ராக்கி சொன்னாங்க. அப்போது, என் மகனுக்கு 3 வயது. ஏழு ஆண்டு வாழ்க்கை நொறுங்கிப்போன மாதிரி இருந்தது.
உடனே, இரண்டு பேரும் சேர்ந்து கவுன்சிலிங் போனோம். அப்போது தான் நான் என்ன தவறு செய்தேன்னு யோசிச்சு, அவங்ககூட நேரம் செலவிட துவங்கினேன். அவங்க என்னை திரும்ப ஏத்துக்க இரண்டு ஆண்டுகள் ஆனது.
ஒருவழியாக, பிரச்னை சரியாகி வாழ்க்கை சுமுகமாக போயிட்டு இருந்த நேரத்தில், பிசினசில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க நாங்க வாழ்ந்து கொண்டிருந்த வீட்டை மனைவியிடம் சொல்லாமல் விற்று, கடனை அடைத்த பின் வீட்டை விற்றது பற்றி கூறினேன்.
வீட்டை விற்றதற்கு சண்டை போடாமல், என் கஷ்டத்தை அவர்களிடம் சொல்லாமல் இருந்து விட்டேன் என சண்டை போட்டாங்க.
வாழ்க்கைக்கு பணம் தேவையில்ல, அன்பு போதும்னு உணர்ந்த தருணம் அது. இப்படி வாழ்க்கையில் நான் பண்ண ஒவ்வொரு தவறையும் திருத்தி மனுஷனா மாத்தியிருக்காங்க. இரண்டு பேரும் சேர்ந்து உழைச்சு பிசினசை பழைய நிலைக்கு கொண்டு வந்தோம்.
காதலிக்கிறது முக்கியம் இல்லை. அந்தக் காதலுக்காக இரண்டு பேரும் சேர்ந்து போராடுவது தான் முக்கியம்.