ADDED : ஜன 08, 2024 11:44 PM
ஹாசன்: வரதட்சணை வாங்கி வர மறுத்த மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, ஹாசன் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
ஹாசன் அருகே மொசலே ஒசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் புட்டசாமி. இவரது மனைவி புட்டபாக்யம்மா. இவர்களுக்கு 2005ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். வரதட்சணை கேட்டு புட்டபாக்யம்மாவை, கணவரும், அவரது பெற்றோரான திம்மஜோகி, வெங்கடம்மா கொடுமைப்படுத்தினர். ஆனாலும் வரதட்சணை வாங்கி வர புட்டபாக்யம்மா மறுத்தார்.
இதனால் 2009 செப்டம்பர் 10ம் தேதி, புட்டபாக்யம்மா கழுத்தை நெரித்து, புட்டசாமி கொலை செய்தார். அவரை கைது செய்த போலீசார், ஹாசன் ஒன்றாவது மாவட்ட கூடுதல் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி சதானந்த சாமி நேற்று தீர்ப்பு கூறினார். புட்டசாமிக்கு ஆயுள் தண்டனையும், 75,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதில் 60,000த்தை மகன்கள் பராமரிப்புக்கு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.