நக்சல் அச்சுறுத்தல் உள்ள 17 கிராமங்களுக்கு 'வெளிச்சம்'
நக்சல் அச்சுறுத்தல் உள்ள 17 கிராமங்களுக்கு 'வெளிச்சம்'
ADDED : மே 18, 2025 12:33 AM

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், நக்சல் பாதிப்புக்குள்ளான மொஹ்லா- - மன்பூர்- - அம்பாகர் சௌகி மாவட்டத்தில், 17 கிராமங்களுக்கு முதன் முறையாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் இருந்து, 150 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது மொஹ்லா- - மன்பூர்- - அம்பாகர் சௌகி மாவட்டம். எளிதில் யாரும் செல்ல முடியாதபடி மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளுக்கு நடுவே அமைந்துள்ளது. இங்குள்ள, கதுல்ஜோரா, கட்டாபர், போத்ரா, புக்மார்கா, சம்பல்பூர், தடேகாசா உள்ளிட்ட கிராமங்களுக்கு, மின் இணைப்பு கொடுத்து அதிகாரிகள் சாதனை படைத்துள்ளனர்.
கடினமான நிலப்பரப்பு மற்றும் நக்சல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த பகுதிகளை அடைவது மிகவும் சவாலானது. மேலும் இங்கு மின்வசதி வழங்குவது முடியாத காரியமாகவே இருந்தது.
இங்குள்ள குழந்தைகள் மண்ணெண்ணெய் விளக்குகளை வைத்து படித்து வந்த நிலையில், முதலில் சோலார் மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.
ஆனால், பராமரிப்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் பல கிராமங்களில், சூரிய மின் தகடுகள் திருடப்பட்டன. மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். இந்த நிலையில், மத்திய அரசு திட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய் செலவில் மின் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டது.
இதன் வாயிலாக, 17 கிராமங்களில், 540 குடும்பங்கள் பயனடையும். முதற்கட்டமாக, 275 குடும்பங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு வழங்கப்பட்டதை பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடினர்.