லிங்காயத், ஒக்கலிகர் தலைவர்கள் கைகோர்ப்பு! பிரமாண்ட பேரணி நடத்த திட்டம்: ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கைக்கு எதிர்ப்பு
லிங்காயத், ஒக்கலிகர் தலைவர்கள் கைகோர்ப்பு! பிரமாண்ட பேரணி நடத்த திட்டம்: ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கைக்கு எதிர்ப்பு
ADDED : மார் 03, 2024 06:59 AM
பெங்களூரு: ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை, சித்தராமையா தலைமையிலான கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு, 'பூமராங்'காக மாறியுள்ளது. அறிக்கைக்கு எதிராக, மாநிலத்தின் லிங்காயத், ஒக்கலிகர் தலைவர்கள் கொதித்தெழுந்துள்ளனர். இரண்டு சமுதாயங்களும் கைகோர்த்து பிரமாண்ட பேரணி நடத்தவும் தயாராகின்றன.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. சட்டசபை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிபடி, ஐந்துத் திட்டங்களை செயல்படுத்தியதால், சித்தராமையா அரசுக்கு நல்ல பெயர் கிடைத்தது. அவரின் செல்வாக்கும் அதிகரித்தது.
கட்டளை
இதை சாதகமாக பயன்படுத்தி, வரும் லோக்சபா தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றிவிட, காங்கிரஸ் திட்டம் வகுத்து வருகிறது. மாநிலத்தில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என, மாநில தலைவர்களுக்கு கட்சி மேலிடம் கட்டளையிட்டுள்ளது.
இதன்படி முதல்வர் சித்தராமையா, துணை முதல்வரும் கட்சியின் மாநில தலைவருமான சிவகுமார் உட்பட, அமைச்சர்கள், வெற்றிக்கான வியூகம் வகுத்து வருகின்றனர். கட்சிக்கு சாதகமான அலை எழுந்துள்ளதாக கருதிய நிலையில், சித்தராமையாவின் கணக்கு தவறாக மாறி வருகிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில், ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை அடிப்படையில் சலுகைகள் வழங்க முதல்வர் திட்டமிட்டார்.
இதன் மூலம் அனைத்து சமுதாயங்களின் ஆதரவையும் பெற்று, லோக்சபா தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறலாம் என, கணக்குப் போட்டிருந்தார்.
இதே காரணத்தால், பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த.,வில் உள்ள, லிங்காயத், ஒக்கலிக தலைவர்களின் கடுமையான எதிர்ப்பை மீறி, ஜெயபிரகாஷ் ஹெக்டேவிடம் ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை, அவர் பெற்றுக்கொண்டார்.
இந்த முடிவு தான் அவரது அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் செயலால், லிங்காயத், ஒக்கலிகர் சமுதாயங்கள் கொதிப்படைந்துள்ளன.
முக்கியத்துவம்
கர்நாடகாவில் லிங்காயத், ஒக்கலிகர் பிரபலமான சமுதாயங்களாகும். மக்கள்தொகை பலத்தில், மாநிலத்தில் இவ்விரு சமுதாயங்கள் முதல் இடத்தில் இருந்தன.
இந்த சமுதாயத்தினருக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் முக்கியத்துவம் அளிக்கின்றன. தேர்தலில் சீட் கொடுப்பது, பதவி வழங்குவதிலும் இவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.
ஆனால் தற்போதைய ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையின்படி, மூன்றாவது, நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் எண்ணிகை அதிகம் உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கை அம்சங்களை, லிங்காயத், ஒக்கலிக சமுதாய தலைவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. காந்தராஜு அறிக்கையளிக்க தயாரான போதே, இரண்டு சமுதாய தலைவர்களும் இணைந்து கூட்டம் நடத்தி, தங்களின் எதிர்ப்பை காண்பித்தனர். இப்போதும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அதிருப்தி
ஸ்ரீசைலம் மடத்தின் சென்னசித்தராம பண்டிதராத்யா சிவாச்சார்யா, கூடல சங்கம மடத்தின் ஜெய மிருதுஞ்செய சுவாமிகள் உட்பட, லிங்காயத், வீர சைவ மடாதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
காந்தராஜு அறிக்கையை நிராகரிக்க வலியுறுத்தி, இரண்டு சமுதாயங்களும் ஒருங்கிணைந்து, மாநில அளவில் பிரமாண்ட பேரணி நடத்த தயாராகின்றன. போராட்டம் நடத்தி தங்களின் சமுதாயங்களின் நலனை காக்க முன் வந்துள்ளன.
வீரசைவ மஹாசபா - கர்நாடக ஒக்கலிகர் சங்கத்தின் தலைவர்கள், விரைவில் கூட்டம் நடத்தி பேரணி, போராட்டத்துக்கான திட்டம் வகுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக, வீரசைவ லிங்காயத் சமுதாய மடாதிபதிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்துவர்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை, அமைச்சரவையில் தாக்கல் செய்தால், அங்கும் கூட எதிர்ப்புத் தெரிவிக்க லிங்காயத், ஒக்கலிகர் சமுதாய அமைச்சர்கள் ஆலோசிக்கின்றனர்.
சட்ட போராட்டம்
'லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் நிலையில், ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற முதல்வர் சித்தராமையா, தேன்கூட்டில் கைவிட்டுள்ளார்' என, ஆளுங்கட்சியினரே கூறுகின்றனர்.
ஒக்கலிகர் சங்க தலைவர் ஹனுமந்தையா கூறியதாவது:
காந்தராஜு தயாரித்த விவேகமற்ற, ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கைக்கு, ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம். ஆனால் இதை பொருட்படுத்தாமல், அறிக்கையை முதல்வர் பெற்றுள்ளார். இதை எதிர்த்து நாங்கள் சட்ட போராட்டம் நடத்துவோம்.
துணை முதல்வர், அமைச்சர்கள், பல்வேறு சங்கங்கள், அமைப்பினருடன் கலந்தாலோசித்து, அடுத்தகட்ட போராட்டத்துக்கு திட்டம் வகுப்போம். இந்த அறிக்கை தேவையற்றதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

