தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பெங்களூரு சிறை: கைதிகள் மது அருந்தி ஆட்டம் போடும் வீடியோ வைரல்
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பெங்களூரு சிறை: கைதிகள் மது அருந்தி ஆட்டம் போடும் வீடியோ வைரல்
ADDED : நவ 10, 2025 09:40 AM

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் மது அருந்தி விட்டு, ஆட்டம் போடும் மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், விசாரணை கைதிகள் என 4,800 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள பிரபல ரவுடி குப்பாச்சி சீனா, சிறைக்குள் தன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ, கடந்த மாதம் வெளியாகி இருந்தது. சில தினங்களுக்கு முன், சிறைக்குள் ஏராளமான கைதிகள், செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது. இது மாநிலம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பயங்கரவாதி ஜுகாத் சகீல் மன்னா, பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய உமேஷ் ரெட்டி, தங்க கடத்தல் வழக்கில் கைதான தருண் உள்ளிட்ட பல கைதிகள் செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானதால், மாநில அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இது குறித்து விசாரணைக்கு பின், அனைத்தையும் தெரிவிக்கிறேன் என முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார்.
தற்போது, சிறையில் இருந்து மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது, கைதிகள் மது மற்றும் சிற்றுண்டிகளுடன் ஆடம்பர விருந்துகளை பரிமாறி கொண்டு, ஒருவருக்கொருவர் நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சிறை ஊழியர்கள் உதவியுடன், கைதிகள் மொபைல் பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ள நிலையில், இந்த வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்து உள்ளது.
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பெங்களூரு சிறை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ராஜ உபச்சாரம் அளிப்பது ஏன்? இதற்கு பக்கபலமாக இருக்கும் சிறை நிர்வாகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதிப்பது என நெட்டிசன்கள் இணையத்தில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

