மதுபான கொள்கை வழக்கு: கவிதாவை கைது செய்தது அமலாக்கத்துறை
மதுபான கொள்கை வழக்கு: கவிதாவை கைது செய்தது அமலாக்கத்துறை
UPDATED : மார் 15, 2024 06:26 PM
ADDED : மார் 15, 2024 06:21 PM

புதுடில்லி,: புதுடில்லியில் நடந்த மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில், மதுபானக் கொள்கை மாற்றப்பட்டது.
இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நடந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் மதுபான தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் புதுடில்லி ஆட்சியாளர்களிடையே, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக, அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், கலால் துறையை கவனித்து வந்த புதுடில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது.
இந்த முறைகேட்டில் தெலங்கானா முன்னாள் முதல்வரும், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.இந்நிலையில் புதுடில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்து உள்ள அறிக்கையில், சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. கவிதா, தெலுங்கானா மேல்சபை உறுப்பினராகவும் உள்ளார்.
மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக கவிதாவிடம் அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியுள்ளது.இதையடுத்து இந்த வழக்கில் கவிதாவை இன்று (15-ம் தேதி) அமலாக்கத்துறை கைது செய்தது. கவிதாவை டில்லி அமலாக்கத்துறை தலைமை அலுவலகம் கொண்டு செல்ல அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

