நாக்பூர் கலவரத்தை துாண்டியதாக உள்ளூர் அரசியல்வாதி கைது; பெண் போலீசிடம் அத்துமீறிய கும்பல்
நாக்பூர் கலவரத்தை துாண்டியதாக உள்ளூர் அரசியல்வாதி கைது; பெண் போலீசிடம் அத்துமீறிய கும்பல்
ADDED : மார் 20, 2025 03:43 AM
நாக்பூர் : நாக்பூரில் நடந்த வன்முறையை துாண்டிவிட்டதாக, உள்ளூர் அரசியல்வாதி பாஹிம் ஷமீம் கான், 38, என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இங்குள்ள சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள முகலாய அரசர் அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி, ஹிந்து அமைப்புகள் கடந்த, 17ம் தேதி, நாக்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த போராட்டத்தின்போது, முஸ்லிம்களின் புனித நுால் அவமதிக்கப்பட்டதாக வதந்தி பரவியது.
வதந்தி
இதைத் தொடர்ந்து, நாக்பூரின் பல இடங்களில் முஸ்லிம்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். கற்களை வீசியும், வாகனங்களுக்கு தீவைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை தடுக்க முயன்ற போலீசார் மீதும் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதல்களில், 34 போலீசார் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக, 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த போராட்டத்தை துாண்டி விட்டதாக, எம்.டி.பி., எனப்படும் சிறுபான்மையினர் ஜனநாயகக் கட்சியின் உள்ளூர் தலைவரான பாஹிம் ஷமீம் கான் நேற்று கைது செய்யப்பட்டார்.
முஸ்லிம்கள் புனித நுால் எரிக்கப்பட்டதாக வதந்தி பரப்பியதுடன், வன்முறையைத் துாண்டிவிடும் வகையில் அவர் பேசிய வீடியோ மற்றும் புகைப்படத்தை, போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த, 2024 லோக்சபா தேர்தலில், நாக்பூரில் இருந்து போட்டியிட்டவர் பாஹிம் ஷமீம் கான்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக நாக்பூரின் பல இடங்களில் நேற்றும் தடை உத்தரவு தொடர்ந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிலைமை சீரடைந்தாலும், தொடர்ந்து பதற்ற நிலை நிலவுகிறது.
ஆடை கிழிப்பு
நாக்பூரின் மஹால் பகுதியில் சிட்னிஸ் பூங்கா அருகே போலீசார் மீது வன்முறையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது, கலவர கட்டுப்பாட்டுப் போலீஸ் பிரிவைச் சேர்ந்த பெண் கான்ஸ்டபிளிடம், வன்முறையாளர்கள் அத்துமீறியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அந்த பெண் கான்ஸ்டபிளின் ஆடைகளை கிழிக்க முயற்சி நடந்ததாகவும், அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டதுடன், ஆபாசமாக பேசியதாகவும், போலீஸ் தரப்பில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.