புதிய வருமான வரி மசோதா; ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட குழு அமைப்பு
புதிய வருமான வரி மசோதா; ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட குழு அமைப்பு
UPDATED : பிப் 15, 2025 06:50 AM
ADDED : பிப் 15, 2025 06:46 AM

புதுடில்லி: புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தாக்கல் செய்தார். மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட சிறப்பு குழுவை சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்து உத்தரவிட்டார்.
வருமான வரி சட்டங்களை சீர்திருத்துவதற்கான புதிய வருமான வரி மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா வாயிலாக, 1961ல் இயற்றப்பட்ட வருமான வரி சட்டத்தில் உள்ள கடுமையான வார்த்தை ஜாலங்கள் எளிமையாக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். புதிய வருமான வரி சட்டம், 2026 ஏப்., 1 முதல் அமலுக்கு வரும்.
இது, ஏற்கனவே உள்ள வரி அடுக்குகளை மாற்றாது. புதிய வருமான வரி மசோதா 600 பக்கங்கள், 23 அத்தியாயங்கள், 16 அட்டவணைகள் மற்றும் 536 உட்பிரிவுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட சிறப்பு குழுவை சபாநாயகர் ஓம்பிர்லா அமைத்து உத்தரவிட்டார்.
பா.ஜ., மூத்த தலைவரும் ஒடிசாவின் கேந்திரபாரா எம்.பி.யுமான பைஜயந்த் பாண்டா தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். குழுவில்,
* ஜார்க்கண்ட் பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே,
* கர்நாடகாவின் பா.ஜ., எம்பி ஜெகதீஷ் ஷெட்டர்,
* ராஜஸ்தான் பா.ஜ.., எம்.பி., பிபி சவுத்ரி,
* ஹரியானா காங்கிரஸ் எம்.பி., தீபேந்தர் சிங் ஹூடா,
* மேற்குவங்கம் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.