சுத்தமில்லாத மனைகளுக்கு அபராதம் பி.டி.ஏ.,வுக்கு லோக் ஆயுக்தா உத்தரவு
சுத்தமில்லாத மனைகளுக்கு அபராதம் பி.டி.ஏ.,வுக்கு லோக் ஆயுக்தா உத்தரவு
ADDED : அக் 11, 2024 07:07 AM

பெங்களூரு: தங்களின் மனைகளை துாய்மையாக வைத்திராத உரிமையாளர்களுக்கு, அபராதம் விதிக்கும்படி பி.டி.ஏ., எனும் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்துக்கு, லோக் ஆயுக்தா உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரின் விஸ்வேஸ்வரய்யா லே -- அவுட்டில், காலி மனையில் பெருமளவில் குப்பை குவிந்து கிடந்தது. இதை சுத்தம் செய்யாதது குறித்து, மாநகராட்சியின் ஆர்.ஆர்.நகர் மண்டலம் மீது, மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதை தீவிரமாக கருதிய லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல், தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தார்.
இது குறித்து, நேற்று முன்தினம் விசாரணை நடத்திய நீதிபதி, 'கட்டடம் கட்டப்படாத மனைகளை, துாய்மையாக வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திராத மனை உரிமையாளர்களுக்கு, நோட்டீஸ் அளித்து அபராதம் விதிக்கும்படி பி.டி.ஏ.,வுக்கு உத்தரவிட்டார். மனைகளை துப்புரவு செய்வதற்கான செலவு தொகையை வசூலித்து, மாநகராட்சியிடம் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.
ஆர்.ஆர்.நகர் மண்டல கமிஷனர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பெங்களூரு குடிநீர் வாரியம், பி.டி.ஏ., மேற்கு பிரிவு பொறியாளர்கள் விசாரணைக்கு ஆஜராகினர்.
காலி மனைகளின் அக்கம், பக்கத்தில் வசிக்கும் மக்கள், துாய்மையான சூழ்நிலையில் வசிக்க, வழிவகுக்க வேண்டும். லே - அவுட்களில் தெரு விளக்குகள் பொருத்த வேண்டும். வெளிச்சமாக இருந்தால் சாலைகள், காலி மனைகளில் குப்பை கொட்டுவதை நிறுத்துவர். பிளாக் ஸ்பாட்டுகள் குறையும்.
பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில், நடைபயிற்சி செய்ய வருவோர், குப்பையை வீசுகின்றனர். இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது மண்டல கமிஷனர், 'விஸ்வேஸ்வரய்யா லே - அவுட்டின் சில பகுதிகள், பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் வருகின்றன. இதனால் துப்புரவு பணிகள் கஷ்டமாக உள்ளது' என்றார்.
இதை கேட்டு எரிச்சலடைந்த நீதிபதி, 'எந்த சாக்கு, போக்கும் கூறாதீர்கள். கூடுதல் துப்புரவு தொழிலாளர்கள், ஆட்டோ டிப்பர்களை பயன்படுத்தி, துாய்மையை காப்பாற்றுங்கள். லோக் ஆயுக்தா திடீர் வருகை தந்து ஆய்வு செய்யும். அப்போது துாய்மையாக இல்லா விட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தார்.

