சொத்து சேர்த்த 7 அரசு அதிகாரிகள் வீடுகளில் 'லோக் ஆயுக்தா' ரெய்டு
சொத்து சேர்த்த 7 அரசு அதிகாரிகள் வீடுகளில் 'லோக் ஆயுக்தா' ரெய்டு
ADDED : ஜூன் 01, 2025 12:50 AM

பெங்களூரு : கர்நாடகாவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த ஏழு அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில், லோக் ஆயுக்தா போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
கர்நாடகாவில் அரசு அதிகாரிகள் மீது புகார்கள் வரும்போது, அவர்களது வீடு, அலுவலகங்களில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்துகின்றனர்; நகை, பணம், சொத்து ஆவணங்கள், வாகனங்களை பறிமுதல் செய்வது நடக்கிறது. ஆனாலும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பதை மட்டும், அரசு அதிகாரிகள் நிறுத்தவே இல்லை.
இந்நிலையில், பெலகாவியில் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட தலைவராக பணியாற்றும் சித்தலிங்கப்பா; பாகல்கோட் கிராம பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதல் நிலை உதவியாளர் சைலஜா சுபாஷ்; பல்லாரி பொதுப்பணி துறை இன்ஜினியர் அமின் முக்தர் அகமது உள்ளிட்ட ஏழு அதிகாரிகள், தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக லோக் ஆயுக்தா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த ஏழு அதிகாரிகளின் வீடுகளில் நேற்று லோக் ஆயுக்தா போலீசார், படுக்கை, சமையல் அறைகள், வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.
சோதனையின்போது, சொத்து வாங்கியதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நேற்று இரவு வரை சோதனை நடந்தது.