முடா வழக்கில் முதல்வரிடம் லோக் ஆயுக்தா... விசாரணை! 2 மணி நேரம் பதில் அளித்தார் சித்தராமையா
முடா வழக்கில் முதல்வரிடம் லோக் ஆயுக்தா... விசாரணை! 2 மணி நேரம் பதில் அளித்தார் சித்தராமையா
ADDED : நவ 07, 2024 12:42 AM

மைசூரு: 'முடா' வழக்கில் லோக் ஆயுக்தா விசாரணைக்கு, முதல்வர் சித்தராமையா நேற்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு, முதல்வர் இரண்டு மணி நேரம் பதில் அளித்தார். முதல்வருக்கு எதிராக, 'கோ பேக்' கோஷம் எழுப்பிய, பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர்.
முதல்வர் சித்தராமையா, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மைசூரு 'முடா'வில் இருந்து மனைவி பார்வதிக்கு 56 கோடி ரூபாய் மதிப்பிலான 14 வீட்டு மனைகளை வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்ற உத்தரவின்படி சித்தராமையா, பார்வதி, இவரது சகோதரர் மல்லிகார்ஜுன சாமி, நிலத்தின் உரிமையாளர் நாகராஜ் ஆகியோர் மீது, மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதல்வரின் மனைவி, அவரது சகோதரர், நாகராஜ் ஆகியோர், ஏற்கனவே லோக் ஆயுக்தா விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், நவம்பர் 6ம் தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராகும்படி, முதல்வருக்கும் லோக் ஆயுக்தா சம்மன் அனுப்பி இருந்தது.
40 கேள்விகள்
'விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளேன்' என்று, முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் கூறி இருந்தார். இதன்படி நேற்று காலை பெங்களூரில் இருந்து மைசூருவுக்கு சித்தராமையா காரில் வந்தார்.
காலை 9:45 மணிக்கு மைசூரு விருந்தினர் மாளிகைக்கு சென்று, சற்று நேரம் ஓய்வெடுத்தார். அங்கிருந்து புறப்பட்டு சரியாக, 10:15 மணிக்கு லோக் ஆயுக்தா அலுவலகத்திற்கு சென்றார். அவரிடம் சரியாக, 10:30 மணிக்கு விசாரணை துவங்கியது. லோக் ஆயுக்தா எஸ்.பி., யுதேஷ், முதல்வரிடம் விசாரணை நடத்தினார்.
'முடா'வில் இருந்து மனைவிக்கு வீட்டுமனை வாங்கி கொடுத்தது, வீட்டுமனையை திரும்ப ஒப்படைத்தது உட்பட 40க்கும் மேற்பட்ட கேள்விகள் முதல்வரிடம் கேட்கப்பட்டுள்ளன. அதற்கு அவரும், பொறுமையாக பதில் அளித்துள்ளார். இரண்டு மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து, மதியம் 12:35 மணிக்கு லோக் ஆயுக்தா அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.
நீதிமன்ற உத்தரவு
பின், விருந்தினர் மாளிகையில் சித்தராமையா அளித்த பேட்டி:
லோக் ஆயுக்தா விசாரணைக்கு ஆஜர் ஆனேன். அவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்துள்ளேன். மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என்று அவர்கள் என்னிடம் கூறவில்லை. நான் அளித்த பதில்களை பதிவு செய்து கொண்டனர்.
லோக் ஆயுக்தா விசாரணையை பா.ஜ., தலைவர்கள் கிண்டல் செய்கின்றனர். பா.ஜ., ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடு பற்றி அவர்கள் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டனரா? லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கியது பா.ஜ.,தான். இப்போது அந்த அமைப்பின் மீது சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
பா.ஜ., -- ம.ஜ.த., தலைவர்கள் என் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் நீதிமன்றத்தில் தகுந்த பதில் அளிக்கிறேன். லோக் ஆயுக்தா போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி என்னிடம் விசாரணை நடத்துகின்றனர். ஆனால், பா.ஜ., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதன் மூலம் நீதிமன்ற உத்தரவை அவர்கள் அவமதித்து உள்ளனர்.
முடா வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் சி.பி.ஐ., அதிகாரிகள் மத்திய பா.ஜ., அரசின் பேச்சைக் கேட்டு செயல்படுகின்றனர்.
எனது மனைவிக்கு முடாவில் இருந்து கிடைத்த 14 வீட்டு மனைகளும் சட்ட ரீதியாக கிடைத்தவை. அதையும் நாங்கள் இப்போது திருப்பிக் கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், முதல்வரின் மைசூரு வருகையை எதிர்த்து, மைசூரு டவுன் ராமசாமி சதுக்கத்தில் பா.ஜ., தலைவர்கள் போராட்டம் நடத்தினர். முதல்வருக்கு எதிராக, 'கோ பேக்' கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, இரண்டு பஸ்களில் அழைத்து சென்றனர். பின், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
தனியார் காரில் வந்த முதல்வர்
பெங்களூரில் இருந்து மைசூருக்கு அரசு காரில் சித்தராமையா வரவில்லை. தனியார் காரில் தான் வந்தார். முடா அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான பின்னரும், அதே காரில் சென்னப்பட்டணா புறப்பட்டு சென்றார். அரசு காரில் வந்தால் அதை வைத்தும் பா.ஜ., அரசியல் செய்யும் என்பதால், அரசு காரை தவிர்த்து தனியார் காரில் வந்தது குறிப்பிடத்தக்கது.
***