ADDED : பிப் 26, 2024 02:56 AM

சண்டிகர் : ஹரியானாவில் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான, நபெய் சிங் ரதி மர்ம நபர்களால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஹரியானாவில் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் மாநில தலைவராக நபெய் சிங் ரதி பொறுப்பு வகித்து வந்தார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ.,
நேற்று ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டம், பகதுர்கா பகுதியில் நபெய் சிங் காரில் சென்ற போது, மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள், இவரை வழி மறித்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
படுகாயமடைந்த நபெய் சிங்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு அவர் உயிரிழந்தார். நபெய் சிங்குடன் வந்த கட்சி நிர்வாகி ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க ஹரியானா போலீஸ் தனிப்படை அமைத்துள்ளது.
இதற்கிடையே இந்திய தேசிய லோக் தள தலைவர் அபய் சவுதாலா இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ''நபெய் சிங் உயிருக்கு ஆபத்து இருந்த போதும், மாநில அரசு பாதுகாப்பு வழங்க தவறிவிட்டது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும்,'' என கூறியுள்ளார்.

