ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வுக்கு 'லுக் - அவுட் நோட்டீஸ்'
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வுக்கு 'லுக் - அவுட் நோட்டீஸ்'
ADDED : நவ 08, 2025 12:31 AM

பாட்டியாலா: பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., ஹர்மீத் சிங் பதன்மஜ்ராவுக்கு எதிராக, 'லுக் - அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் சனூர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா. ஜிராக்பூரைச் சேர்ந்த ஒரு பெண் கொடுத்த புகார்படி, செப். 1ம் தேதி ஹர்மீத் சிங் மீது, சிவில் லைன்ஸ் போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர்.
கர்னல் மாவட்டம் தாப்ரி கிராமத்தில் உறவி னர் வீட்டில் இருந்த ஹர்மீத் சிங்கை கைது செய்ய, செப். 2ம் தேதி போலீசார் சென்றனர்.
அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஹர்மீத் சிங் காரில் ஏறி தப்பினார்.
அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், ஹர்மீத் சிங் பதன்மஜ்ராவுக்கு எதிராக போலீசார், 'லுக் - அவுட் நோட்டீஸ்' பிறப்பித்துள்ளனர்.
எம்.எல்.ஏ.,வின் அதிகாரப்பூர்வ வீடு, தனியார் வீடு மற்றும் பஸ் நிலையங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
விசாரணை நீதிமன்றத்தில் பதன்மஜ்ராவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு வழக்கறிஞர்கள் பிக்ரம்ஜித் சிங் புல்லர் மற்றும் எஸ்.எஸ். சக்கு ஆகியோர் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

