ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி இல்லை: மசூதி நிர்வாகத்தின் மனு தள்ளுபடி
ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி இல்லை: மசூதி நிர்வாகத்தின் மனு தள்ளுபடி
ADDED : டிச 06, 2025 12:58 AM
நாக்பூர்: ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி தொழுகை நடத்த அனுமதி கோரிய மசூதி நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்த மஹாராஷ்டிரா உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை, 'எந்த மதமும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வழிபாடு நடத்த வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை' என, தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் உள்ள கவுசியா மசூதி நிர்வாகம், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி தொழுகை நடத்த அனுமதி கோரி, அம்மாநில உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மனு தாக்கல் செய்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் அனல் பன்சாரே, ராஜ் வகோட் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
தங்கள் மதத்தை பின்பற்ற ஒலிபெருக்கிகளின் பயன்பாடு கட்டாயமானது என்பதை நிரூபிக்க, மசூதி நிர்வாகம் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
மற்ற வர்களின் அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றோ, ஒலிபெருக்கிகள் அல்லது மேள தாளம் மூலம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றோ எந்த மதமும் போதிக்கவில்லை.
இதை உச்ச நீதிமன்றமே தீர்ப்பில் சுட்டிக் காட்டி உள்ளது. பொது சுகாதாரம் மற்றும் உடல்நலத்துக்கு ஒலி மாசு தீங்கானது. அது, செவித்திறன் பாதிப்பை ஏற்படுத்தும். 120 டெசிபலைத் தாண்டினால் காது ஜவ்வைக் கிழிக்கக்கூடும்.
நாக்பூரில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளில், விதிகளை மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. பொது சுகாதாரத்தை பாதிக்கும் இந்த விவகாரத்தில் மஹாராஷ்டிரா அரசு பயனுள்ள தீர்வை கொண்டு வர வேண்டும்.
மேலும், விழாக்கள் நடத்த அனுமதிக்கும் போது, விதிகள் பின்பற்றப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

