ADDED : டிச 30, 2024 12:23 AM

பாலக்காடு; பாலக்காடு அருகே, காதலர்கள் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஆலத்துார் வெங்கன்னுார் பகுதியைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணனின் மகள் உபன்யா 18, எக்ஸ்ரே டெக்னீஷியன் படிப்பு படித்து வந்தார்.
இவரும், குழல்மன்னம் குத்தன்னுார் பகுதியைச் சேர்ந்த கண்ணனின் மகனும் செண்டை மேள கலைஞருமான சுதினும் 23, ஒருவருக்கு ஒருவர் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் இருவரும், உபன்யாவின் வீட்டின் படுக்கை அறையில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து வீட்டிற்கு வந்த தந்தை, இதை பார்த்துள்ளார். அவர் ஊர் மக்களிடம் இதை தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த ஆலத்துார் போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், 'திருமணம் செய்ய இரு வீட்டாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என நினைத்து, இவர்கள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்' என்றனர்.

