செலவு குறைவு... லாபம் அதிகம்! தரிசு நிலத்தில் திராட்சை விளைச்சல்
செலவு குறைவு... லாபம் அதிகம்! தரிசு நிலத்தில் திராட்சை விளைச்சல்
ADDED : பிப் 17, 2024 11:00 PM

கர்நாடகாவில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகின. தற்போது வறட்சி நிலவுவதால் சாகுபடி செய்ய, விவசாயிகள் யோசித்து வருகின்றனர். இந்த நேரத்திலும் விவசாயி ஒருவர், திராட்சை விளைச்சலில் அசத்தி வருகிறார்.
விஜயபுரா தாலுகா, பன்னிஹட்டி கிராமத்தில் வசிப்பவர் வெங்கடராவ் பாட்டீல், 48, விவசாயி. இவர் வசிக்கும் கிராமத்தில் வறட்சி நிலவுகிறது. ஆனால், வெங்கடராவ் மட்டும் திராட்சை விளைச்சலில் ஈடுபட்டு வருகிறார்.
எட்டு ஏக்கர்
மனம் திறந்து வெங்கடராவ் கூறியதாவது:
எனக்கு தெரிந்த ஒருவரிடம் இருந்து, 2014ம் ஆண்டில், 8 ஏக்கர் தரிசு நிலத்தை வாங்கினேன். அந்த நிலத்தை நன்கு உழுத பின்னர், என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
எனக்கு திராட்சை செடிகளை வளர்க்க ஆசை வந்தது. இதுபற்றி சக விவசாயிகளிடம் கூறியபோது, தரிசு நிலத்தில் திராட்சையா என்று கிண்டல் செய்தனர்.
ஆனாலும் மஹாராஷ்டிராவுக்கு சென்று 30 லட்சம் ரூபாய்க்கு, திராட்சை விதைகளை வாங்கி வந்தேன். இயற்கை உரங்களை பயன்படுத்தியதால், திராட்சை செடிகள் நன்கு வளர ஆரம்பித்தன.
திராட்சை விற்பனை மூலம் ஆண்டுக்கு 25 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை, வருமானம் கிடைக்கிறது.
திராட்சை செடிகளை பராமரிக்க 8 லட்சம் ரூபாய் செலவு செய்து, விசாலமான கொட்டகை அமைத்துள்ளேன். என்னிடம் 10 பேர் வேலை செய்கின்றனர்.
ஐடியா
தண்ணீரை சேமித்து வைப்பது எப்போதும் நல்லது. சொட்டுநீர்ப் பாசன முறையை நான் கடைப்பிடித்து வருவதால், வறட்சி நேரத்திலும் என்னால், திராட்சை விளைச்சலில் ஈடுபட முடிகிறது.
ஆரம்பத்தில் என்னை கிண்டல் செய்தவர்கள், இப்போது என்னிடமே திராட்சை விளைவிக்க, 'ஐடியா' கேட்கின்றனர்.
எனது நிலத்தில் காலியாக இருக்கும் சிறிய இடத்தில், காய்கறிகளையும் பயிரிட்டு வளர்க்கிறேன். திராட்சை விளைவிக்க செலவு குறைவு; லாபம் அதிகம்.
இன்னும் 2 ஆண்டுகளில், ஆண்டு வருமானமாக 40 லட்சம் ரூபாய் சம்பாதிப்பேன் என்று நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.