கே.எல்.ராகுலுக்கு எல்.எஸ்.ஜி., அணி நிறுவனர் பாராட்டு
கே.எல்.ராகுலுக்கு எல்.எஸ்.ஜி., அணி நிறுவனர் பாராட்டு
ADDED : டிச 13, 2024 05:27 AM

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 2008 முதல் ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடத்தி வருகிறது.
இதில், உலகின் பல நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இவ்வாறு, கடந்த 2021, 2022, 2023ல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு, கர்நாடகாவை சேர்ந்த கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டார். அத்துடன், அணியை வழிநடத்தி செல்லும் கேப்டனாகவும் இருந்தார்.
நடப்பாண்டு நடந்த ஐ.பி.எல்., தொடரில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியிடம், எல்.எஸ்.ஜி., எனும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, மோசமான தோல்வியை சந்தித்தது.
இதனால் அதிருப்தி அடைந்த எல்.எஸ்.ஜி., அணி நிறுவனர் சஞ்சீவ் கோயங்கா, மைதானத்திலேயே கே.எல்.ராகுலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அப்போதே, 'இனிமேல் இந்த அணியில் விளையாடக்கூடாது' என தீர்மானித்திருந்தார்.
இந்நிலையில், 2025ம் ஆண்டுக்கான ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில், டில்லி கேபிட்டல்ஸ் அணி, கே.எல்.ராகுலை, ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அதேவேளையில், சஞ்சீவ் கோயங்கா, கன்னடருக்கு மரியாதை அளிக்கவில்லை என்று, கோபத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், தனியார் சமூக வலைதளத்தில், ராகுல் குறித்து சஞ்சீவ் கோயங்கா கூறியதாவது:
கே.எல்.ராகுல் என் குடும்பத்தில் ஒருவர். மூன்று முறை எங்கள் அணியை வழிநடத்தி, சிறப்பாக விளையாடினார். எப்போதுமே சிறப்பாக விளையாடிய, திறமையான வீரர். இந்திய அணியிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.
சில நேரங்களில், சூழ்நிலைக்கு ஏற்ப நமது உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். இதனால் எங்கள் உறவில் பாதிப்பு இல்லை. எந்த அணியில் இடம் பெறுவரோ, அந்த அணிக்காக செயல்படுவர். அவர் மீது எனக்கு அன்பும், மரியாதையும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதே வேளையில், ரிஷப் பண்ட்டை, 27 கோடி ரூபாய்க்கு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

