ADDED : ஜூன் 28, 2025 08:23 PM

சண்டிகர்:பஞ்சாப் மாநிலம், லூதியானா மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற, ஆம் ஆத்மியின் சஞ்சீவ் அரோரா, எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றார். சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான் அவருக்குப் பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.
பஞ்சாபின், லூதியானா மேற்கு தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., குர்பிரீத் பாஸி கோகி, ஜனவரி மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து, அந்த தொகுதிக்கு கடந்த 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
ஆம் ஆத்மி சார்பில், சஞ்சீவ் அரோரா, காங்கிரஸில் பாரத் பூஷண் ஆஷு, பா.ஜ.,வில் ஜீவன் குப்தா, சிரோமணி அகாலி தளம் சார்பில் பரூப்கர் சிங் குமான் உட்பட, 14 பேர் போட்டியிட்டனர்.
சஞ்சீவ் அரோரா 35,179 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். ஆஷு - 24,542, ஜீவன் குப்தா - 20,323, பரூப்கர் சிங் குமான் - 8,203 ஓட்டுக்கள் பெற்றிருந்தனர்.
சண்டிகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சஞ்சீவ் அரோரா எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றுக் கொண்டார். சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில பொறுப்பாளர் மணீஷ் சிசோடியா, மாநில தலைவர் அமன் அரோரா, நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா, எம்.எல்.ஏ., புத் ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.