லக்னோவின் சமையல் பாரம்பரியத்திற்கு 'யுனெஸ்கோ' அமைப்பு அங்கீகாரம்
லக்னோவின் சமையல் பாரம்பரியத்திற்கு 'யுனெஸ்கோ' அமைப்பு அங்கீகாரம்
ADDED : நவ 02, 2025 03:07 AM
லக்னோ: உத்தர பிரதேசத்தின் தலைநகரமான லக்னோ, அதன் பன்முகத் தன்மை கொண்ட சமையல் பாரம்பரியத்துக்காக, 'யுனெஸ்கோ'வின், 'சிறந்த படைப்புகள் கொண்ட நகரங்கள்' பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளது.
உலகளவில் பாரம்பரிய சின்னங்கள், பழமை மாறாமல் கடைப்பிடிக்கப்படும் விஷயங்களை ஐ.நா., சபையைச் சேர்ந்த, 'யுனெஸ்கோ' அமைப்பு தேர்வு செய்து அங்கீகரித்து வருகிறது.
கடந்த, 2004ல் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ், நிறுவப்பட்ட யு.சி.சி.என்., எனப்படும் யுனெஸ்கோ கிரியேட்டிவ் சிட்டிஸ் நெட்வொர்க்' என்ற அமைப்பு, நகரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அதன் கலாசாரம் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தவும், சிறந்த படைப்புகளை அடையாளம் கண்டு அங்கீகரித்து வருகிறது.
அந்த வகையில், லக்னோவின் சமையல் படைப்புகள் அந்த அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தெருவோர கொறிக்கும் உணவுகள் முதல் உயர் தர சைவ, அசைவ உணவுகள், இனிப்புகள் வரை என உணவு பட்டியலை பன்முகத் தன்மையுடன் வைத்திருக்கும் நகரமாக லக்னோ திகழ்கிறது.
இந்நிலையில், அந்நகரத்துக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது குறித்து யுனெஸ்கோ தலைமை இயக்குநர் ஆட்சி அசோலே கூறியதாவது:
ஒரு நகரத்தின் சமையல் படைப்பாற்றலை பேணுவதற்கும், அதன் வளர்ச்சிக்கு உதவுவதற்கும் உலக நகர தினம் அன்று அதற்கான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அந்த வகையில், படைப்பாற்றல் நகரங்கள் பட்டியலில், புதிதாக 58 நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
புதிய பட்டியலில், உத்தர பிரதேசத்தின் லக்னோ, 'உணவு பண்பாடு' பிரிவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பட்டியலில் உள்ள நகரங்களின் எண்ணிக்கை, 408 ஆக அதிகரித்துள்ளது.
100க்கும் மேற்பட்ட நாடுகள், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதன் வாயிலாக, பட்டியலில் உள்ள நகரங்கள் மேலும் பல முதலீடுகளை ஈர்க்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில் உள்ள ஐ.நா., சபை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'வாயில் நீர் ஊறவைக்கும் கலுாட்டி கபாப் முதல் அவதி பிரியாணி, சுவையான சாட் மற்றும் பானி பூரி, மகான் மலாய் போன்ற இனிப்பு வகைகள் வரையிலான உணவு வகைகள், லக்னோவின் புகழை பறை சாற்றுகின்றன.
'புதிய அங்கீகாரத்தின் வாயிலாக பல நுாற்றாண்டுகள் பழமையான மரபுகளால் வளப்படுத்தப்பட்ட உணவுக்கான சொர்க்கமாக லக்னோ மாறுகிறது' என, தெரிவித்துள்ளது.

