ADDED : பிப் 15, 2024 04:59 AM

பெங்களூரு : 'கர்நாடகா கடுமையான வறட்சியில் தத்தளிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், சபாநாயகர் காதருக்கு சொகுசு கார் தேவையா' என பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கேள்வி எழுப்பியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன், கர்நாடக அமைச்சர்களுக்கு, மொத்தம் 9 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில், புதிய கார்களை அரசு வாங்கியது. தற்போது சபாநாயகர் காதருக்கு, 41 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பார்ச்சூனர் சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பில் இருந்தும், எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறியிருப்பதாவது:
அனாவசிய செலவுகளை குறைத்து, ஏற்கனவே உள்ள வாகனத்தில் மாற்றம் செய்து, சபாநாயகர் பயன்பாட்டுக்கு கொடுத்திருக்கலாம். இதன் மூலம் கருவூலத்துக்கு ஏற்படும் சுமையை குறைத்திருக்கலாம். அதை விட்டுவிட்டு சொகுசு கார் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
ஏற்கனவே மக்கள் கடுமையான வறட்சியால் பாதிப்படைந்துள்ளனர். 223 தாலுகாக்களை வறட்சி பாதித்தவை என, அரசே அறிவித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், தண்ட செலவுகளுக்கு கடிவாளம் போட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

