ம.பி.,யில் கோவில் நகரங்களில் அமலுக்கு வந்தது முழு மதுவிலக்கு
ம.பி.,யில் கோவில் நகரங்களில் அமலுக்கு வந்தது முழு மதுவிலக்கு
ADDED : ஏப் 02, 2025 03:24 AM

போபால் : மத்திய பிரதேசத்தில், உஜ்ஜைன், ஓம்காரேஷ்வர், மகேஷ்வர், மைஹார் உள்ளிட்ட 19 கோவில் நகரங்களில், முழு மதுவிலக்கு நேற்று(ஏப்.,1) முதல் அமலுக்கு வந்தது.
ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த ஜன., 24ல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், உஜ்ஜைன், ஓம்காரேஷ்வர் உள்ளிட்ட 19 கோவில் நகரங்கள், 'முற்றிலும் புனிதமானவை' என, அறிவிக்கப்பட்டு, அங்கு முழு மது விலக்கை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த முழு மதுவிலக்கு உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, உஜ்ஜைன், ஓம்காரேஷ்வர், மகேஷ்வர், மண்டலேஷ்வர், ஓர்ச்சா, மைஹார், சித்ரகூட், டாடியா, பன்னா, மண்டலா, முல்தாய், மந்த்சவுர், அமர்கண்டக் ஆகிய நகர எல்லைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டன.
இதேபோல், சல்கான்பூர், குண்டல்பூர், பந்தக்பூர், பர்மன்கலான், பர்மன்குர்ட், லிங்கா ஆகிய கிராம பஞ்சாயத்து எல்லைகளில் உள்ள மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டன. இதை, ''போதை ஒழிப்புக்கான வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை,'' என, முதல்வர் மோகன் யாதவ் குறிப்பிட்டார்.
ம.பி., அரசின் இந்த நடவடிக்கைக்கு, மடாதிபதிகள், ஆன்மிக அமைப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ராமாயணி குடி ஆசிரம தலைவர் ராம் ஹிருதய் தாஸ் கூறுகையில், ''இது, வரவேற்கத்தக்க நடவடிக்கை. இதற்காக மாநில அரசை பாராட்டுகிறேன்.
''இருந்தாலும், இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவை முன்கூட்டியே எடுத்திருந்திருக்கலாம். தாமதமாக அமலுக்கு வந்தாலும், இது மிகச் சிறந்த நடவடிக்கை. இதை முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என நம்புகிறேன்,'' என்றார்.