இப்படி, அப்படி மாத்தி மாத்தி மிதிக்கணும்! மாவை காலால் மிதித்து மோமோஸ் ரெடி பண்ணும் வியாபாரி
இப்படி, அப்படி மாத்தி மாத்தி மிதிக்கணும்! மாவை காலால் மிதித்து மோமோஸ் ரெடி பண்ணும் வியாபாரி
ADDED : செப் 09, 2024 03:34 PM

போபால்: மத்தியபிரதேசத்தில் மோமோஸ் தின்பண்டம் தயாரிக்க மாவை காலால் ஒருவர் மிதிக்கும் வீடியோ பார்ப்போரை உவ்வே சொல்ல வைத்துள்ளது.
மோமோஸ் தின்பண்டம்
விதவிதமான தின்பண்டங்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மாலைநேரம் வந்துவிட்டால் ஸ்நாக்ஸ் டைம் என்று குதூகலித்து சாலையோரங்களில் கடை, கடையாக தேடி வித்தியாசமான தின்பண்டங்களை சுவைப்பவர்கள் அதிகம். அப்படியான நபராக இருப்பவர்களை சற்றே எச்சரிக்கும் வகையில் மோமோஸ் தயாரிக்கும் ஒரு வீடியோ ஒன்று வெளியாகி பார்ப்போரை உவ்வே சொல்ல வைத்து இருக்கிறது. அந்த வீடியோவில் மாவை காலால் மிதித்து, மிதித்து தயார் செய்வதே இந்த உவ்வேக்கு காரணம்.
பிரபலமான கடை
மத்தியபிரதேச மாநிலத்தில் பர்கி போலீஸ் ஸ்டேஷன் அருகில் சாலையோர கடை ஒன்று உள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜ்ஸ்குமார் கோஸ்வாமி, சச்சின் கோஸ்வாமி என்ற இருவரும் இந்த கடையின் உரிமையாளர்கள். இவர்களின் மோமோஸ் அந்த பகுதியில் ஏக பிரபலம்.
காலில் மிதி
இவர்கள் கடையில் மோமோஸ் தயாரிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் உள்ளாடை மட்டுமே அணிந்த ஒருவர், பெரிய பாத்திரம் ஒன்றில் இருக்கும் மாவை பிசைகிறார். ஆனால் ஒரு வித்தியாசம், கைகளுக்கு பதிலாக காலை பயன்படுத்தி அப்படி ஒரு மிதி, அப்புறம் இப்படி ஒரு மிதி என்று மாவை பிசைந்து தள்ளுகிறார்.
சீல் வைக்க வேண்டும்
வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை அதிர வைத்துள்ளது. அவர்கள் மனிதர்களே அல்ல, சிறைக்கு அனுப்ப வேண்டிய நபர்கள் என்றும், இருவரின் சாலையோர கடைக்கு அதிகாரிகள் சீல் வைக்க வேண்டும் என்றும் கமெண்டுகளை பதிவிட்டு உள்ளனர்.
தவிர்ப்பது நலம்
இதனிடையே வீடியோ வைரலான நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சாலையோர கடைகளில் சுகாதாரம் என்பது பெரும்பாலும் இருக்குமா என்பதை உறுதி செய்ய முடியாது, எனவே இது போன்ற கடைகளில் சாப்பிடுவதை தவிர்ப்பது நலம் என்று அறிவுறுத்துகின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.