மஹா., அமைச்சரவை விரிவாக்கம்: 39 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
மஹா., அமைச்சரவை விரிவாக்கம்: 39 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
UPDATED : டிச 15, 2024 10:24 PM
ADDED : டிச 15, 2024 06:54 PM

நாக்பூர்: மஹாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் 39 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ' மஹாயுதி' கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. கடந்த டிச., 4ம் தேதி முதல்வராக பா.ஜ.,வின் பட்னவிஸ் பதவியேற்றார். துணை முதல்வர்களாக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் ஆகியோர் பதவியேற்றனர். அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகாக்கள் குறித்து மூன்று கட்சிகளும் பேசி வந்தன. இதில் ஒரு மித்த முடிவு ஏற்பட்டது. இதனையடுத்து, சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ள நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
வழக்கமாக அமைச்சரவை விரிவாக்கம் தலைநகர் மும்பையில் நடக்கும் நிலையில், இன்று நாக்பூரில் நடந்தது. இதற்கு முன்னர் 1991ம் ஆண்டு மட்டும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாக்பூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது. சட்டப்படி, இம்மாநிலத்தில் 43 பேர் அமைச்சர்களாக பதவி வகிக்க முடியும். இன்று, 39 எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பா.ஜ.,வைச் சேர்ந்த 19 பேரும், சிவசேனாவைச் சேர்ந்த 11 பேரும், தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த 9 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். விழாவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பட்னவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.