மஹா., முதல்வராகிறார் பட்னவிஸ்; நாளை புதிய அரசு பதவியேற்பு!
மஹா., முதல்வராகிறார் பட்னவிஸ்; நாளை புதிய அரசு பதவியேற்பு!
UPDATED : டிச 04, 2024 03:52 PM
ADDED : டிச 04, 2024 12:15 PM

மும்பை: மஹாராஷ்டிரா முதல்வராக பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பையில் நாளை (டிச.,05) மாலை 5:30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் மஹாயுதி கூட்டணி, 288 தொகுதிகளில், 230ல் வென்றது. இதில், பா.ஜ., மட்டும் 132ல் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, 10 நாட்களை கடந்தும், முதல்வர் பதவிக்கான போட்டி நிலவுவதால், புதிய அரசு அமைவதில் தாமதம் ஏற்பட்டது. தனிப்பெரும் கட்சி என்பதால், முதல்வர் பதவியை பா.ஜ., கைப்பற்ற முனைப்பு காட்டியது.
இந்நிலையில், இன்று (டிச.,04) மேற்பார்வையாளர்கள் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தலைமையில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் மும்பையில் உள்ள சட்டசபை வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், மஹா., சட்டசபை குழு தலைவராக, தேவேந்திர பட்னவிஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இன்று மாலை தேசியவாத காங்., தலைவர் அஜித்பவார், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருடன் சென்று கவர்னரை சந்தித்து பட்னவிஸ் ஆட்சியமைக்க உரிமை கோரினார்
நாளை (டிச.,05) மாலை 5 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. ஒரு வாரமாக நீடித்த இழுபறிக்கு முடிவு வந்தது. பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.