மஹா., ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி... அறிவிப்பு!
மஹா., ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி... அறிவிப்பு!
ADDED : அக் 16, 2024 02:56 AM

புதுடில்லி : மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நவ., 20ல் ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவ., 13 மற்றும் 20ல் இரண்டு கட்டங் களாகவும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுகள் நவ., 23ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மொத்தம், 288 உறுப்பினர்கள் அடங்கிய மஹாராஷ்டிரா சட்டசபையின் பதவி காலம், நவ., 26ல் முடிவுக்கு வருகிறது. 81 உறுப்பினர்கள் உடைய ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜன., 5ம் தேதியுடன் முடிகிறது.
இதையடுத்து இரண்டு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் நேற்று அறிவித்தார்.
மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நவ., 20ல் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஜார்க்கண்ட் சட்டசபை தொகுதிகளுக்கு நவ., 13 மற்றும் 20ல் இரண்டு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.
பிரியங்கா போட்டி
இது தவிர, காங்., - எம்.பி., ராகுல் ராஜினாமா செய்த கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதிக்கும், பல்வேறு மாநிலங்களில் உள்ள 48 சட்டசபை தொகுதிகளுக்கும் நவ., 13ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடுகிறார்.
உத்தரகண்டின் கேதார்நாத் சட்டசபை தொகுதி மற்றும் மஹாராஷ்டிராவின் நான்டெட் லோக்சபா தொகுதிக்கு நவ., 20ல் இடைத்தேர்தல் நடக்கிறது.
தேர்தல் மனுக்கள் நிலுவையில் இருப்பதால், மேற்கு வங்கத்தின் பசிர்ஹட், உத்தர பிரதேசத்தின் மில்கிபுர் லோக்சபா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
மஹாராஷ்டிராவில், 9.63 கோடி வாக்காளர்களும், ஜார்க்கண்டில் 2.6 கோடி வாக்காளர்களும் ஓட்டளிக்க உள்ளனர்..
தேர்தல்களில் பதிவான ஓட்டுகள் நவ., 23ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.