பெண்களுக்கு மாதம் ரூ.3000 மஹா விகாஸ் அகாடி வாக்குறுதி
பெண்களுக்கு மாதம் ரூ.3000 மஹா விகாஸ் அகாடி வாக்குறுதி
ADDED : நவ 07, 2024 02:35 AM

மும்பை : மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா, பா.ஜ., - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது. 288 சட்டசபை தொகுதிகளுடைய இம்மாநிலத்தில், நவ., 20ல் தேர்தல் நடக்கிறது; நவ., 23ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
இந்த தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்., - சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மஹா விகாஸ் அகாடி கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய்; அரசு போக்குவரத்து பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்; விவசாயிகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி; வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 4000 ரூபாய் உதவித்தொகை, 25 லட்சம் ரூபாய் வரையிலான உடல்நலக் காப்பீடு போன்ற வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
'தேர்தலில் மீண்டும் வென்றால், பெண்களுக்கு மாதம் வழங்கப்படும் உதவித்தொகை, 1500ல் இருந்து 2100 ரூபாயாக உயர்த்தப்படும்' என, ஆளும் மஹாயுதி கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.