மஹா.,வில் மகளிர் உதவித்தொகை நிறுத்தம்: காங்., புகாரால் தேர்தல் கமிஷன் நடவடிக்கை
மஹா.,வில் மகளிர் உதவித்தொகை நிறுத்தம்: காங்., புகாரால் தேர்தல் கமிஷன் நடவடிக்கை
ADDED : ஜன 13, 2026 12:46 AM

மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு, நாளை மறுநாள் தேர்தல் நடக்க உள்ளதால், மகளிர் உதவித்தொகையான, 1,500 ரூபாய் வழங்கும் திட்டத்தை மாநில தேர்தல் கமிஷன் நிறுத்தி வைத்தது.
மஹாராஷ்டிராவில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு, வரும் 15ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. 16ம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன.
இந்நிலையில், மஹாராஷ்டிரா அரசு 2024ல் துவங்கிய, மகளிருக்கான மாத உதவித்தொகை 1,500 ரூபாய் வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்திற்கு சேர்த்து 3,000 ரூபாயாக மகரசங்கராந்தி பண்டிகையை ஒட்டி ஜனவரி 14ல் விடுவிக்க திட்டமிட்டிருந்தது.
காங்கிரஸ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 'தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் 3,000 ரூபாய் வழங்குவது நடத்தை விதிமீறல். இது வாக்காளர்களிடையே செல்வாக்கு செலுத்தும்' என காங்., குற்றஞ்சாட்டியது.
இது குறித்து விளக்க மளித்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், 'இது தொடர்ச்சியான மக்கள் நல திட்டம், தேர்தல் கட்டுப்பாடுகளுக்கு உட்படாது' என கூறியிருந்தார்.
இருப்பினும், மாநில தேர்தல் கமிஷன் தேர்தலுக்கு முன் மகளிர் உதவித்தொகை வழங்க கூடாது என திட்டத்தை நிறுத்தி நேற்று உத்தரவிட்டது.

