மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: முக்கிய குற்றவாளியை கைது செய்தது அமலாக்கத்துறை
மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: முக்கிய குற்றவாளியை கைது செய்தது அமலாக்கத்துறை
ADDED : நவ 14, 2026 06:21 AM

ராய்ப்பூர்: பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி தொடர்பான மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில், முக்கிய குற்றவாளியும், செயலியின் நிறுவனருமான சவுரப் சந்திரகாரை (31) சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை கைது செய்தது. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுரப்பை, நவம்பர் 19ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சத்தீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகர், ரவி உப்பால் ஆகிய இருவரும் இணைந்து, ஐக்கிய அரபு எமிரேட்சை தலைமையிடமாக கொண்டு மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலியை நடத்தினர். இந்தச் செயலி மூலம் 2019 முதல் 80 ஆயிரம் கோடி ரூபாயை மோசடியாக சம்பாதித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சத்தீஸ்கரின் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் தொடரப்பட்ட 13 வழக்குகளை சிபிஐக்கு மாற்றி மாநில அரசு உத்தரவிட்டது. குற்றவாளிகள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. அவர்களின் சொத்துகளும் முடக்கப்பட்டன.சவுரப் சந்திரசேகருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது.
சவுரப் சந்திரசேகர் ஓமனில் இருப்பது கண்டறியப்பட்டது. அவரை அந்நாட்டு போலீசார் கைது செய்து, இந்தியாவுக்கு நாடு கடத்தினர். அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்திருந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை கைது செய்து காவலில் எடுத்துள்ளது.
இந்த வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.1,885 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன; 190 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, 6 குற்றப்பத்திரிகைகளில் 116 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
