மஹா.,வில் ஹிந்தி எதிர்ப்பு பேரணி; பறந்தது 20 ஆண்டு பகை; ஒரே மேடையில் ராஜ், உத்தவ் தாக்கரே!
மஹா.,வில் ஹிந்தி எதிர்ப்பு பேரணி; பறந்தது 20 ஆண்டு பகை; ஒரே மேடையில் ராஜ், உத்தவ் தாக்கரே!
UPDATED : ஜூலை 05, 2025 07:44 PM
ADDED : ஜூலை 05, 2025 01:01 PM

மும்பை: 20 ஆண்டுகள் பகையை மறந்து,மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு பேரணியில் உத்தவ், ராஜ் தாக்கரே இருவரும் பங்கேற்றனர். ஒரே மேடையில் இருவரும் அமர்ந்து இருந்தனர்.
மஹாராஷ்டிரா அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த உத்தவ் தாக்கரே, அவரது சகோதரர் ராஜ் தாக்கரே இருவரும் இருபது ஆண்டு பகையை மறந்து மும்மொழி கொள்கைக்கு எதிராக இன்று (ஜூலை 05) ஹிந்தி எதிர்ப்பு பேரணியில் பங்கேற்றனர்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் படி மஹாராஷ்டிரா பா.ஜ., மகாயுதி அரசு 1 ம் வகுப்பு முதல் பள்ளிகளில் ஹிந்தியை மூன்றாம் மொழியாக மாற்றியது இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து மாநில அரசு பின் வாங்கியது. எனினும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள எண்ணிய உத்தவ், ராஜ் தாக்கரே இருவரும் இன்று (ஜூலை 05) பேரணி நடத்தினர்.
மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் இருவரும் பங்கேற்றனர். இரு சகோதரர்களும் இணைந்து நடத்திய முதல் பொதுக்கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசியதாவது: சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவால் செய்ய முடியாத ஒன்றை, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் செய்து விட்டார்.
என்னையும், சகோதரர் உத்தவ் தாக்கரேவையும் இணைத்து விட்டார். மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஹிந்தி திணிப்பை ஒரு போதும் ஏற்க மாட்டோம். 3ம் மொழிக்கு இங்கு என்ன தேவை உள்ளது. ஹிந்தி பேசும் மாநிலங்களை விட, ஹிந்தி பேசாத மாநிலங்கள் அதிக வளர்ச்சி கண்டுள்ளன.
ஹிந்தி திணிப்பு
மஹாராஷ்டிராவில் மராத்திக்கு மட்டுமே முக்கியத்துவம். பா.ஜ., ஹிந்தியை திணிக்கிறது. ஹிந்தி என்பது வெறும் 200 ஆண்டு கால வரலாறு கொண்ட மொழி மட்டுமே ஆகும்.
மஹாராஷ்டிராவில் இருந்து மும்பையை பிரிக்க சதி நடக்கிறது.
இந்தியாவின் பாதி பகுதிகளை மஹாராஷ்டிரா பேரரசர்கள் ஆட்சி செய்த போதும் மராத்தியை திணிக்கவில்லை. ஹிந்தியை எதிர்க்கவில்லை. ஆனால் மாநிலங்கள் மீது திணிப்பது ஏன்? இவ்வாறு ராஜ் தாக்கரே பேசினார்.