மஹாராஷ்டிரா துணை சபாநாயகர் வினோதம் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து போராட்டம்
மஹாராஷ்டிரா துணை சபாநாயகர் வினோதம் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து போராட்டம்
ADDED : அக் 05, 2024 01:26 AM

மும்பை, மஹாராஷ்டிராவில், தன்கர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து, மாநில அரசை மிரட்டும் விதமாக தலைமை செயலகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து, துணை சபாநாயகர் மற்றும் மூன்று எம்.எல்.ஏ.,க்கள் நேற்று நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந் துள்ளது. இங்கு, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தன்கர் சமூகத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மாநில அரசுமுடிவு செய்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் மும்பையில் உள்ள தலைமை செயலகத்தில், அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.
அப்போது, துணை சபாநாயகர் ஜர்ஹாரி நிர்வால் மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ., உட்பட பழங்குடியினத்தைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.,க் கள், அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, தேசியவாத காங்கிரசைச் சேர்ந்தவரும், துணை சபாநாயகருமான ஜர்ஹாரி நிர்வால் மற்றும் மூன்று எம்.எல்.ஏ.,க்கள் தலைமை செயலகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தனர்.
இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்கும் விதமாக ஏற்கனவே அந்த வளாகத்தில் வலை கட்டப்பட்டுள்ளது.
துணை சபாநாயகர் உட்பட நான்கு பேரும் அந்த வலையில் குதித்ததால் உயிர் தப்பினர். தலைமை செயலகத்தில் உள்ள போலீசார் மற்றும் பாதுகாவலர்களின் உதவியுடன் அனைவரும் மீட்கப்பட்டனர்.